ஆயுதம் செய்வோம்

அடிப் பெண்ணே !
கருவில் பிறந்து
கருவை சுமந்து
கருவிழிகளில்
உயிர்காப்பவள் நீயே !..
இம் மானுடத்தின் மாந்தர்களால்
அம் மைவிழியோரம் கரிக்க
நேர்ந்தால் உன் வாள்விழி வீச்சால்
வதம் செய்யத் தயங்காதே !..
அக்னிக் குஞ்சாய்
ஆளப் பிறந்தவள் ,தீயோரின்
தீக்கங்கு சொற்களை
இரையாக்கிவிடு ..
உன் தீமைகளும் தீர்ந்துவிடும் !..
அன்பால் ஆளும் வித்தையைக்
கற்றுக்கொடு அகிலத்திற்கு ..
ஆணவத்தால் அடக்கியாள
முயல்வோர்க்கு என்றுமே
புரியாத புதிர்தான் நீ !..
உரிமைகளையும் உணர்வுகளையும்
பறிக்க நினைப்போருடன் நீ
யுத்தம் செய் !
உன் விடாமுயற்சி வில்லில்
தன்னம்பிக்கை நாணேற்றி !..
வெற்றி எட்டும் வரை ..
ஏழாம் அறிவு பெற நினைத்து
ஆறறிவை மறந்து தம்
சிற்றறிவால் மங்கையரை
சீர்குலையச் செய்யும்
சிறியோர்க்கு ஆயுதம் ஒன்றை செய் !
உன் எட்டாவது அவர்கள்
கற்பனைக்கு எட்டா அறிவால்!..
விடிகின்ற ஒவ்வொரு காலையும்
விடையாகட்டும் உன் வாழ்வில்..
பொழுதோடு போகட்டும்
பொருளற்ற கஷ்டங்கள் ..
நினைப்பதெல்லாம் நடக்க
நினைப்பதைவிட வருவதையெல்லாம்
வாய்ப்பாக்கு!..அதன்
வழிகளில் வலியோடிப் போகும் !..
விதை செய் விருட்சங்களை ..
வீரம் தழைத்தோங்கும் அதில்,
எழில்மிகு பெண்ணினத்தின்
ஏற்றங்களும் சிறப்புகளும்
மலர்களாய் மலர்ந்து
மணம் வீசட்டும் !..
காற்றில் மட்டுமல்ல !
அனைவரின் மூச்சிலும்தான்!