கண்ணுள் எரியும் எரிமலை
கண்ணுள் எழும் கவிதையின் சாராம்சம்
இரத்த நாளங்களில் பயணித்து
என் இதயத்தைக் கொல்கிறது
கண்களுக்குள் எரியும் எரிமலை
என் கண்ணீரால் அணைந்து சாம்பலாகிறது
வாழ்வுக்கும் வசந்தத்துக்கும் வழிகாட்டிய
என் பாரதத்தாய்!
உடல் பதைத்து உள்ளம் நடுங்கி
உதிரம் சிந்தி நிற்கிறாள்
ஊக வணிகமும் தனியார் மயமும்
மக்களின் வாங்கும் சக்தியைக் குலைத்து
இரத்தக் கண்ணீர் வடிக்கும் ஏழ்மை கண்டு
அவள் இதயம் நொந்து அழுகிறாள்
என் கண்களுக்குள் எரிகிறது கனல்
கண்ணீரால் அணைந்து சாம்பலாகிறது
விடியலுக்கான விபரத்தை விளக்கமாக
எடுத்துச் சொல்கிறாள்
மத வெறியின் கோரத்தால்
பாரதத்தை பங்கிட்ட கயவர்களை
சுட்டு விரலால் அடையாளம் காட்டுகிறாள்
இனியும் வேண்டாம்
குஜராத்தும் முசாபர் நகரும்
என்றே ! அலறி துடிக்கிறாள்
அவள் உடம்பெல்லாம் காயங்கள்
என் கண்களில் எரிமலை தகிக்கிறது
கண்ணீரால் அணைந்து சாம்பலாகிறது
இவர்கள் பெண்ணியம் பேசும் கயவர்கள்
பெண்மையை தினமும் தூக்கிலிடும்
பெண்ணியம் பேசிடும் கயவர்கள்
தென்றலின் இனிமை தவழும்
அவளின் காடுகளைக் கூட கயவர்கள்
கனிம வளத்துக்காக காயப்படுத்துகிறார்கள்
கண்ணெல்லாம் நெருப்பாய் எரிகிறது
என் கண்ணீரால் அணைந்து சாம்பலாகிறது
விடியலுக்கான விபரத்தை
விளக்கமாக எடுத்துச் சொல்கிறாள்
அதை விளங்கிக் கொள்ள
இளஞர்கள் இங்கில்லை
எரிமலை கண்ணுக்குள் எரியுது
அது தினம் தினம்
என் கண்ணீரால் கரையுது