வாழ்க்கை வாழ்வதற்கே
பிறப்பு .......... இறப்பு
மாறிடும் ஓர் எழுத்து !
இடைப்பட்ட காலமே
நம்மின் வாழ்க்கை !
வளர்ச்சியில் மாற்றம்
முகத்திலும் மாற்றம்
உருவத்திலும் மாற்றம்
உள்ளத்திலும் மாற்றம் !
எண்ணத்தில் மாற்றம்
ஏக்கத்திலும் மாற்றம்
அறிவிலும் மாற்றம்
ஆற்றலிலும் மாற்றம் !
விருப்பத்தில் மாற்றம்
விவேகத்தில் மாற்றம்
உணர்விலும் மாற்றம்
உணவிலும் மாற்றம் !
மரணிப்பது உறுதிதானே
மறப்பதும் நாம் ஏனோ !
மாச்சர்யங்கள் ஏனோ
மனமாற்றங்கள் ஏனோ !
நட்பில் விரிசலும் ஏனோ
நடத்தை மாறுவதும் ஏனோ !
உள்ளத்தில் வன்மம் ஏனோ
உலகை வெறுப்பதும் ஏனோ !
பகைகள் தோன்றுவதும் ஏனோ
பங்காளி சண்டையும் ஏனோ !
பொறாமை தீயும்தான் ஏனோ
பொல்லாப்பு மனமும் ஏனோ !
சாதிவெறிகள் ஏனோ
சச்சரவும் நமக்குள் ஏனோ !
மதவெறி தோன்றுவதும் ஏனோ
மதம் பிடித்து அலைவதும் ஏனோ !
சிந்திப்பீர் சிந்தை உள்ளோரே
சிந்திட வேண்டாம் குருதி !
ஆறறிவு படைத்த நாமும் என்றும்
வாழ்ந்திட வேண்டாமா சுகமுடன் !
வாழ்வும் வானவில்லாய்
வண்ணமிகு எண்ணமுடன்
வசந்தமே வீசிட வாழ்வில்
வாழ்ந்திடுவோம் நாமும் இங்கே !
பழனி குமார்