ஆனந்த ராகம் -கே-எஸ்-கலை

எண்ணங்கள் ஒருமிக்க அன்று
எழுத்தோடு இணைந்த சொந்தம் !
வண்ணங்கள் பரிணமிக்க இன்று
கழுத்தோடு பிணைந்த பந்தம் !
===
பொறுப்பான கணவனாய் நான்மாற
விருப்புள்ள அவளென் இணையானாள் !
சிறப்பான மனைவியாய் அவளாக
நானவளின் கருத்துள்ள துணையாவேன் !
குரல்பிடித்து அவளிசையில் மயங்க
கார்வானம் குளிராக பூ-பெய்யும் !
விரல்கடித்து அவளசைவில் கிறங்க
என்வாழ்வு தளிராகப் பூப்-பெய்தும் !
காதலி மாறிட மனைவியென
காயம் மயங்கி விருந்துண்ணும்
காரிகை ஆகிட தாதியென-மனக்
காயங்கள் ஆறிட மருந்துண்ணும் !
===
கடந்தது எப்படி ஒருமாதம்
காதலைச் சொல்லி மகிழுகிறேன் !
நடந்தது என்ன நாடகமா
நானெனைக் கிள்ளி நெகிழுகிறேன் !
நெற்றித் திலகம் சூடி அவள்
ஒற்றைத் திங்கள் கடந்தாலும் !
இற்றைத் தினமென இனிக்கிறது
அற்றைத் திங்கள் ஆழ்மனதில் !