இந்நேரம் -குமார் பாலகிருஷ்ணன்
இந்நேரம்
பூவின் முதுகிலும்
புல்லின் முனை முற்றத்திலும்
உறங்கிக் கொண்டிருக்கும்
பனித்துளிளை ,கைகளாலோ
நாவாலோ தட்டி எழுப்பியிருப்பான்…..
பிஞ்சுக் கால்களோடு
காளியம்மன் கோவிலுக்கும்
நரசிங்க நாயுடு வீட்டுக்குமாய்
துள்ளிக் குதித்து
ஓட்டம் எடுத்து
தெருவையே திருவிழாயாக்கியிருப்பான்….
ஓணான் கரடு ,ஒற்றையடிப் பாதை
வாய்க்கால் சமவெளி
பொட்டல் காடு எல்லாம்
அவன் வரவுக்காய்
ஆயத்தமாகியிருக்கும்….
நகுலன் அவன் அம்மாவிடம்
எங்கள் வீட்டிற்கு வந்தால் தான்
சாப்பிடுவேன் என
கண்ணீரால் சாதத்திற்கு
உப்புச்சுவை கூட்டியிருப்பான் …
அவன் கருப்புவெள்ளை முதுகில்
இளைப்பாற காகமொன்று
கரட்டாங்குடியிலிருந்து
பறந்து புறப்பட்டிருக்கும்…..
சரசக்காவும், பாப்பாத்திக் கிழவியும்
உளுந்து கழுவிய தண்ணீரை
எங்கள் வீட்டுக் குழுதாடியில் ஊற்ற
காட்டு வழியாக கிளம்பியிருப்பார்கள்…
நேற்றுக் கசாப்புக் கடைக்காரனின்
அருவாளுக்கு மட்டும்
அந்த ஆட்டுக் குட்டி
தாரை வார்க்கப் படாமல் இருந்திருந்தால்…