வன்மத்தின் ரத்த வாடை வீசும் திசையில்

வெளிச்சம் தொலைத்த கண்களோடு
பாயினில் சரியும் எனக்கு
வன்மத்தின் ரத்த வாடை மணக்கிறது
இருத்தப்பட்ட கதிரையில்
துப்பாக்கிகள் துடுப்பெடுத்தாடும்
விசாரணை மையத்தின் வாசல் திறக்கிறது
இதற்கு முன்னர் வந்து போன
மதகுரு ஒருவனோ
கிராம சேவையாளனோ
பொது மகனோ
யார் எனத் தெரியாத ஒருவன்
இருட்டுச் சுவர்களுக்குள் துயரங்களை கசிந்து
மரணத்தில் மவுனிக்கிறான்
விசாரணைகளிலிருந்து சுவாசிக்கத்தொடங்குகிறது
துப்பாக்கிகளின் பலவீனங்கள்
தோழனே!
உன் புகைப்படக் கருவியின் புனிதம்
இனவாதத்தின் கோரத்தை அச்சுறுத்துகிறது
பறந்து வந்த திசைகளை
நினைத்துப் பார்க்கிறேன்
இன்னுமே காயப்படாத இலட்சியத்திற்கு
நீயிருக்குமிடத்தில் தான்
வேகம் கூட்டினார்கள் எனக்கு
“கேபிள்” வயர்களால் உடல்முழுதும் வரியுடுத்தி .

//நான்காம் மாடியில் விசாரணை செய்யப்படும் ஊடகவியலாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரனுக்கு//

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (27-Dec-13, 9:50 am)
பார்வை : 86

மேலே