ஏமாறும் தமிழர்களும் ஏப்பமிடும் அரசியல்வாதிகளும்

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே,இந்நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்பிற்காக வந்த தமிழ் இனம் நாட்டு வளர்சிக்காக உயிரைப் பணயம் வைத்து உழைத்துள்ளது.அதன் பயனாக நாடு பெரும் வளர்ச்சி அடைந்து உலகம் போற்றும் அளவிற்கு நாட்டின் புகழ் விளங்கி வருகிறது. இந்த உண்மையை மறுப்பதற்கு நமது அரசுக்கும் துணிவில்லை உண்மையை மறுப்பதற்காக அயல் நாட்டினரும் படை திரட்டி வருவதில்லை.
நிலைமை இப்படி இருக்க நாடு சுதந்திரம் பெற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் சுதந்திரக் கொண்டாட்டத்தை மிக ஆடம்பரமாகக் கொண்டாடிய பின்னரும் அரசாங்கம் இந்தியர்களை மீண்டும் மீண்டும் பல விசியங்களில் நம்மை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் அலைக்கழிப்பதும் ஏன்?
பதின்மூன்று தேர்தல்களிலும் இந்தியர்கள் அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்ததாலா? காலம் முழுவதும் இந்தியர்கள் கையேந்தும் சமூகமாக ஆக்கிவிட்ட அரசாங்கத்தைக் தட்டிக் கேட்க இந்தியர்களுக்கு நல்ல தலைமைத்துவம் இதுநாள் வரையிலும் இல்லாததாலா? இந்தியர்களின் இளிச்சவாயத்தனமா? ஒட்டு மொத்த இந்தியர்களின் அலட்சியப் போக்கா?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் ருக்குன்நெகரா கோட்பாட்டை முழுமையாக ஆதரித்த இந்திய சமுகத்திற்கு அடுக்கடுக்கான சோதனைகளும் அநீதிகளும் திட்டமிட்டே நடைபெற்று வருகின்றன.இந்திய சமுதாயத்தை இந்நாட்டிலிருந்து அழிக்கும் நடவடிக்கைகள் நாட்டில் தொடர்ந்து களம் காண்பது ஏன்? அரசு குறிப்பிட்ட நபர்களுக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதால் நாளும் இந்திய சமுதாயம் அமைதியின்றி காலத்தை ஓட்டும், இக்கட்டானச் சூழலுக்கு அரசு இடம் தருவது முறையா?
இயல்பில், இந்தியர்கள் யாருடனும் பேதம் காட்டாமல் பிற இனமக்களோடு இணக்கப்போக்குடன் வாழும் பண்பையும் வாழ்வியலையும் கொண்டவர்கள்.அன்றாட வாழ்வில் இறைபக்திக் கொண்டவர்கள்.நீதியையும் நேர்மையையும் வாழ்வின் உயிராய் மதிக்கும் கோட்பாட்டுக் குரியவர்கள்.கொல்லாமையை வலியுறுத்தும் நன்னெறி மிக்கவர்கள்.
எட்டாம் நூற்றாண்டில் வணிக நோக்கத்திற்காக வந்த இராஜேந்திர மன்னன் நினைத்திருந்தால்.கடாரத்தை மட்டுமின்றி இந்த நாட்டையே தனதாக்கிக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கலாம்.ஆனால்,அவ்வாறு செய்யாமல், பெருமனதுடன் உள்ளூர்வாசிகளிடமே நாட்டை ஒப்படைத்துவிட்டு தாயகம் திரும்பி மன்னன் இராஜேந்திரச் சோழன்.
நிலைமை அவ்வாரிருக்கையில் காடாரம் என்ற கெடா மாநிலத்தில், இராஜேந்திரச் சோழன் காலடி பதித்த பூஜாங் பள்ளத்தாக்கில் கட்டப்பட்டிருந்த சண்டி 11 ஆவது தளம் மற்றும் அதன் வரலாற்றுத் தடயங்கள் இல்லாமல் அழிக்கப்பட்டது இந்நாட்டுக்கு முழுவிசுவாசமுடன் இருக்கும் இந்தியச் சமூதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.மாநில அரசும்,மத்திய அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.வேண்டுமென்றே செய்யப்பட்ட இந்த நடவடிக்கைக்கு இந்தியச் சமுதாயம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
‘குட்டக்குட்ட குனிபவனும் மடையன்; குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ என்ற நிலையில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் பரதேசிகளாக இந்திய சமூகமாக இனியும் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.அமைதியாக இருப்பதால் அரசாங்கம் இரக்கப்பட்டு நமக்குத் தேவையானவற்றைத் தங்கத்தட்டில் வைத்து யாரும் கொடுக்கப் போவதில்லை.அழுகிறப்பிள்ளைதான் பால் குடிக்கும்.ஊமைகளுக்குக் குடிக்கக்கூட ஒரு வாய்த் தண்ணீர் கூடக் கிடைக்கப் போவதில்லை!கடந்த காலங்களில் பல தவறுகளைச் செய்ததால் பல இழப்புகளைச் சந்தித்துள்ள சோக வரலாறு மீண்டும் நிகழக்கக் கூடாது என்பதில் அனைத்து இந்திய மக்களும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
பதினோராம் நூற்றாண்டிலேயே,கால் பதித்தவன் தமிழன்,பதினான்காம் நூற்றாண்டிலே மலாக்காவை ஆண்டவன் பரமேஸ்வரன் என்னும் இந்து அரசன்,இதன் மூலம் இந்தியர்களின் கால் இந்த மன்ணில் கால்பதித்து,இன்றுவரையில் பலவிதமான இன்னல்களியெல்லாம் அனுபவித்து நாட்டை மேம்பாடையச் செய்த இந்திய சமுதாயத்தின் பல்லாண்டுகால அடிச்சுவட்டை ஒரு நொடியில் தாவடு பொடியாக்கிவிட்டு,பதினாறாம் நூற்றாண்டில் இங்குவந்த போர்துக்கீசியர்களின் கோட்டையை நினைவுச் சின்னமாகப்போற்றி வருகிறது மலாக்கா அரசும் துணைபோகும் மத்திய அரசும்.
வேற்று நாட்டாரின் விட்டுச்சென்ற தடயங்களைப் பாதுகாப்பத்தில் இருக்கும் அக்கறை காலங்காலமாக இந்நாட்டுக்காக வியர்வைச் சிந்திய இனத்தின் அடிச்சுவட்டை திட்டமிட்டே அழிக்கு அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது; மாற்றப்படவேண்டியது. இந்தியச் சமுதாயம் அடுத்து வரும் பதினான்காவது தேர்தலுக்கு முன் ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஒன்றுபடவேண்டும்.
இனியும் அரசாங்கம் இந்தியர்களின் ஏமாளித்தனத்தையும்,ஏழ்மையையும் தங்களின் ஆயிதங்களாகப் பயன் படுத்திக் கொண்டு இந்தியர்களை நிராயிதபாணிகளாக்கி சித்து விளையாட்டுகளை நிறைவேற்றாமல்,உடைபட்ட சண்டியைக் கட்டித்தரவும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்கம் உடனடிக்கை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.இதில் எந்தத் தரப்பினருடன் இணங்கிப் போகும் நடவடிக்கைக்கு இடமில்லை.அரசாங்கம் கண்காணிப்புக்குழு ஒன்றை அமைத்து எதிர்காலத்தில் பாரம்பரியங்களைக் காக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.யுனஸ்கோ பரிந்துரைத்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் முனைப்பு காட்ட வேண்டும்.
நாட்டில் நடந்து முடிந்த, இன்றும் நாட்டு மக்களால் மறக்க முடியாத சில சம்பவங்களை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருவது சிறப்பாக இருக்கும்.சில ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் நடைபெற்றது இச் சம்பவமாகும். முருகன் ஆலயம் ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் ஆலயமணி ஒலிக்கும் சத்தம் கேட்டால் அந்த ஆலயத்தை மூடிவிடுவதாகக் கர்சித்தப் பிரபல அரசியல்வாதி வழக்கொன்றில் சிக்கிய அவர் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டபோது,சிறையில் மணி அடித்தால்தான் அவருக்கு ஏந்திய தட்டில் சோறு கிடைத்ததை நாட்டுமக்கள் மறந்தாலும் இரணமுற்ற இந்துமக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள்.
மற்றுமொரு சம்பவத்தில்,சிலாங்கூரிலுள்ள,கம்போங் பாடாங் ஜாவாவில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயத்தை ஈவிரக்கமின்றி உடைத்தெரிய உத்திவிட்ட மாநிலத்தின் சக்திமிகுந்த அரசியல் பிரமுகரின் ஆணவத்தால் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 ஆவது பொதுத்தேர்தலில்,மாநிலமே எதிர்கட்சியினர் வசம் விழுந்தது. சம்பத்தப்பட்ட அரசியல் வாதி பட்டத்தையும் பதவியையும் இழந்து கேவலப்பட்டு ஜாமினில் இருக்கும் அவர், சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கண்ட, இரு சம்பவங்களும் அரசியல்வாதிகள் தங்கள் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தியதன் விளைவாகும். மேலும்,இச்சம்பவங்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடமாக அமைந்ததுடன், ‘அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்றே கொல்லும்’ எனும் கூற்றை மெய்ப்பித்ததில் மிகையில்லை!
இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டையாளும் வாய்ப்பை வழங்கும் மக்களிடம் அரசியல்வாதிகள் மக்களின் ஓட்டுக்காக கையேந்த வேண்டிய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் கவனமுடன் இருக்க வேண்டும்.அண்மையில் நடைபெற்ற,தேர்தலுக்குப் பின் அரசியல் தங்களின் நிறத்தைக்காட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதை மக்கள் கவனமுடன் கவனித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.
சுனாமியால் பல நாடுகள் அழிவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.சிலநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் சுனாமிகள் பல தலைவர்களைத் தலைக்கீழாகப் புரட்டிப்போட்டிருக்கின்றன.அந்த நிலை இந்நாட்டிற்குத் தேவை இல்லை என்று நினைக்கும் இறக்கமுள்ள தலைவர்களையே மக்கள் விரும்புவர்.ஏய்ப்பவன் ஏமார்ந்து போவான் இது வரலாறு.

முற்றும்

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் – கி (29-Dec-13, 7:30 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 91

சிறந்த கட்டுரைகள்

மேலே