இது பட்டாம்பூச்சிகளின் கதை

பிறந்து வளர்ந்த இடம் விட்டு
சேர்ந்து உண்ட இலை விட்டு..
காலத்தின் கோலத்தால்.. புலம் பெயர்ந்து..
உறவினைத் தேடி மனம் உடைந்து..
தனக்குள் புதையுண்டு.. தவம் இருந்து..
சிறகுகள் பெற்று..
கொண்ட சிறை உடைத்து.. வெளிவந்து..
இன்பம் தேடி.. காற்றிலே மிதந்து..
பூக்களிடம் முகவரி கேட்டு..
என்றோ பிரிந்த தன் உடன்பிறப்பை..
கண்ட களிப்பில் உள்ளம் குளிர்ந்து..
பல கதைகள் பேசி..
உலகம் மறந்து.. கொஞ்சிக் குழவி..
துன்பம் தொலைத்த கணங்கள்..
சில நொடிப்பொழுதினில்
நிரந்தரமாய் உறைந்தே போயின..
மறுநாள்
கண்ணாடியில் பதிந்திருந்த
சிறகுகளின் வண்ணம் பதிந்த உதிரத்தை..
துடைக்கையில் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
நேற்று
பாடித் திரிந்த
இரண்டு பட்டாம்பூச்சிகள்..
தன் வாகனத்தின் வேகத்தை
ஈடுகொடுக்க முடியாமல் உயிர் நீத்தது..