பாரதி வாக்கு பொய்த்ததா கூறும்
மது என்னும் கவிஞர் எழுதிய கவிதைக்குப்
புது வடிவில் பதில் கவிதை
மகாகவியே நீயும் எங்ஙணம் சென்றனை ?
மடமையும் சாதியும் பெருகிக் கொண்டே
தகாத துயரங்கள் செய்தவண்ணம் ! இவை
தவிக்கச் செய்வன பாரதத்தை !
சாதிகள் இல்லையென்றே நீயும் சொல்லிய
சந்தக் கவிதைகள் எங்குளவோ ?
மேதினி எங்கணும் சாதி நிறைந்திங்கு
மீளாதத் துன்பந் தருகிறதே !
நாட்டினிலே பேதங்கள் கூடாதென்று நீயும்
நாவாரப் பாடிய உன்னழகுப்
பாட்டினிலே இந்தப் பாரத மக்களும்
பாவப் பிழைகளைக் கண்டுவிட்டார் !
அலுவல் செய்யும் இடங்களிலும் இங்கே
அற்ப சாதியின் பேதத்தில்! கை
குலுக்கிப் பேசுதல் கூடவோர் தீட்டென்று
குற்றம் பலவன செய்யுகின்றார் !
புதுமைப் பரிசுகள் கிட்டுதுவே எனில்
பூண்டிடும் சாதியைப் பார்ப்பதில்லை !
மதுவைக் குடித்திடும் அந்த இடத்திலும்
மானுடர் சாதிகள் கேட்பதில்லை !
விவேக்பாரதி