பாரதி நீ பொய்யுரைத்தாய்
பாரதி
உனக்கென்ன பைத்தியமா ?
சாதிகள் இல்லையென்று
சொல்லிவிட்டாய் ....
இன்று
தேர்தல் சீட்டும்
கல்யாண சீட்டும்
சாதியை தானே ஆராய்கின்றன
காதலினால் சாதி
ஒழியும் என்றாய்
இங்கே
நாடல்லவா எரிந்து போகிறது
மனிதன் முன்னேறிவிட்டான்
அவன்
முகநூலிலும் சாதியை
புகுத்திவிட்டான்
இன்னும் சில
இடங்களில்
உடைந்துவிடவில்லை
மண்குவளைகள்
அலுவலகங்களில்
பொதுஇடங்களில்
இவர்கள்
உடல் மொழியில்
சாதியை ஆராய்கிறார்கள்
வருத்தம் நிறைய உண்டு
விடுதலை வீரர்கள்
சாதிசங்க விளம்பரப்பொருள்
ஆனதற்கு .....
தேர் இழுக்க
முடியாமல் சில
கிராமங்கள் அடங்கித்தான்
கிடக்கின்றன
இவர்கள் அரசியலில்
குளிர் காய எரிவது
சாதி மறந்த ஏழை குடிசைகள் தான்
இவர்களும்
சாதி பார்ப்பதில்லை
குடிக்கிற இடங்களில்
இலவசம் பெற
முந்தி செல்வதில் இவர்கள்
தீட்டும் பார்ப்பதில்லை
இந்த வீணர்களை
கண்டபின்பு
எப்படி சொல்வேன்
சாதிகள் இல்லையென்று
உண்மை தான்
பாரதி
நீ
பொய்யுரைத்தாயென்பது .............