கடவுளை வேண்டி
முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.
''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும் மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.
இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது.
எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில்ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.
அந்தோ பரிதாபம்!அவரால்நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.
அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில்அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.
நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.