வயதான குழந்தை

அம்மா அம்மா என்று அழைத்தபடி வந்தான் அவளிடம். அவளோ வேலைகளை முடித்து விட்டு கலைப்பாற்றிக் கொண்டிருந்தாள், தன் மகனின் குரல் கேட்டதும் தூங்குவது போல் பாவனை செய்தாள். அவன் மெல்ல மெல்ல தழுவி அம்மா என்று செல்லமாக அழைத்தான்,பின் அவள் நெற்றியில் முத்தமிட்டு, கண்களின் இமைகளை தூக்கி தூக்கி விளையாடினான். அவனின் குறும்பு கொஞ்சல்களை ரசித்த படி படுத்திருந்தாள். அம்மா... வாங்க வந்து ஜன்னல்ல பாருங்க...

அவள் எழுந்து தன் மகனை கட்டி அனைத்து,முத்தமிட்டு உன் பாசமான லீலைகளும் மாறாத அன்பும் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்று நினைத்த படி பெருமூச்சுவிட்டால்......
எழுந்து வாங்கம்மா என்று இழுத்தான்.. என்னப்பா என்ன ஆச்சு என்று பார்த்தாள். மிதமான மழையுடன், சில்லென்று மண் வாசம் நிறைந்த காற்று வீசியது.உடனே ஓர் நாற்காலியை எடுத்து வந்து...இதில் ஏறி மழையை பாருபா என்று சொல்லிவிட்டு, தன் மகனுக்கு மிகவும் பிடித்த வடை செய்து கொண்டு வந்தாள்.இருவரும் மழையை ரசித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஓர் பறவை வந்து ஜன்னல் ஓரம் தன் இறகுகளை விரித்து மழைத்துளிகளை உதறியது. அதை பார்த்ததும்.. அது என்ன என்று கேட்டான்... அதுதான் "குயில்"என்றாள்... சிறிது நேரம் கழித்து மறுபடியும் கேட்டான் ... அம்மா அது பேர் என்ன.. "குயில்"என்றாள்... இன்னும் சில நேரம் கழித்து கேட்டான்,இப்படி பத்து முறை நடந்தது... அப்போதும் சலிக்காமல் சிறித்துக் கொண்டே பத்தாவது முறையும் "குயில்"என்றாள்.

பல வருடங்கள் கழிந்தன,இப்பொழுது அவள் முதுமைக்காலத்தில் அடியெடுத்து வைத்தாள்.ஜன்னல் ஓரம் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருந்தாள்.முதுமை காலத்திற்கே உறிய குணங்களான, மங்கிய கண் பார்வை, சற்று காது கேளாமை, ஞாபக மறதி, உதறிய பேச்சு,குழந்தை தனமான சிரிப்பு மற்றும் அழகிய சுருக்கங்கள் என்று அம்சமாகவும் தெய்வீகமாகவும் காட்சி அளித்தாள்.

அப்பொழுது ஓர் பறவை வந்து அமர்ந்தது போல் உணர்ந்தாள்,அவள் மகனை அழைத்தாள். அவன் என்ன என்று கேட்டுக்கொண்டே மடிக்கணினியுடன் இருந்தான். இங்க வாபா என்றாள்.. என்ன விஷயம் சொல்லுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு... இந்த பறவை பேர் என்ன... அவனோ அருகில் வராமல் எட்டிப் பார்த்து "குயில்" என்றான்.. என்னப்பா சரியா கேக்கல...உடனே அவன் எத்தன வாட்டி சொல்ரது 'குயில் குயில் குயில் 'என்று கோபமாக கத்தினான்.அவள் ஏக்கத்துடன் அவனை பார்த்த படி கண்ணீர் துளிகளை மழை சாரலில் மறைத்தாள்.

நண்பர்களே நாம் சிறிய வயதில் இருக்கும் போது சலிக்காமல் நமக்காக எதையும் செய்யும் நம் தாய் தந்தைக்கு வளர்ந்ததும் சிறிது நேரம் செலவழித்து பாசமாய் பேசுவதை தவிர்க்கிறோம்.இதை மாற்றி குழந்தையாக மாறி வரும் முதுமை பெற்றோர்களை அன்புடன் நடத்துவோம்.


என் காதில் விழுந்த சிறிய தகவலை கற்பனையுடன் சேர்த்து பகிர்ந்துள்ளேன்.

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (9-Jan-14, 2:16 pm)
பார்வை : 139

மேலே