தந்தையுடன் எனது நாட்கள்

எனை
எவ்விதம் கொஞ்சி
மகிழ்ந்திருப்பாய் !!
என் பாலன் பருவத்தில்
என் தந்தையே !

மிதிவண்டியில்
அமர்த்தியழைத்துச்
சென்றதாய் ஞாபகம்
என் தந்தையே !

என் விடியலுக்குமுன்
உனது விடியல் தொடங்குவதும் !
என் இரவிற்குப் பின்
உனது இரவு அமையப் பெற்றதுமாய் !
உழைப்பால்
காலத்தை கதியற்றதாக்கிய
என் தந்தையே !

சனி ஞாயிறுகளில்
மிகையன்பறியச்செய்தவனே
என் தந்தையே !

விடலை பருவத்தை
சொல்லால் செதுக்கிய !
சித்திரையில் அவதரித்த
செம்மானே
என் தந்தையே !

நட்சத்திர ராசிகளின்
கூற்றினை
வென்றெடுக்க முயற்சித்தவனே
என் தந்தையே !

மிதிவண்டியில்
உன்னைப் பின்னமர்த்தி
நான் செலுத்திய
நாட்களை நினைந்தேன்
என் தந்தையே !

மொழியறியா தேசம்
பயணிக்க பணித்ததென்ன
காலமா?
காலத்தை கட்டியிழுக்காமல்
கட்டவிழ்த்துவிட்டேனோ
என் தந்தையே !

உன்னை காணப்
பொருளாகிப் போன
என்னை
உன் சொற்களும்
மூச்சு காற்றும்
வழி நடத்திக்கொண்டிருக்கின்றன
என் தந்தையே !!!

எழுதியவர் : பாவூர்பாண்டி (10-Jan-14, 11:15 am)
பார்வை : 92

மேலே