பொங்கல் பொங்கட்டும்
பொங்கல் பொங்கட்டும்.
பொங்கும் பொங்கலாய் பொங்கும் மங்களம்
எங்கும் தங்கிட பொங்கல் பொங்கட்டும்.
பங்கம் மங்கவும் துங்கம் ஓங்கவும்
சங்கம் முழங்குவோம் பொங்கல் பொங்கட்டும்.
உணவு செய்பவன் கனவு கனியவும்
மனது மகிழவும் பொங்கல் பொங்கட்டும்.
மனித அணைகளும் உணர்ந்து திறந்தும்
மனிதம் வாழவும் பொங்கல் பொங்கட்டும்.
காட்டில் வாழ்ந்த கூட்டு வாழ்வும்
நாட்டில் பேணவும் பொங்கல் பொங்கட்டும்
காட்டு விலங்காய் காமம் மீறும்
கோட்டி மாறவும் பொங்கல் பொங்கட்டும்.
கடமை மறந்து கையை நீட்டும்
கசடர் திருந்தவும் பொங்கல் பொங்கட்டும்.
உடமை சேர்க்க ஊரார் பறிக்கும்
முடவர் வருந்தவும் பொங்கல் பொங்கட்டும்.
உழைத்து வாழ்வோம் என்னும் உணர்வும்
உலகம் பழகவும் பொங்கல் பொங்கட்டும்.
களைத்த உழவன் உழைத்த பரிசாம்
பிழைத்து வாழவும் பொங்கல் பொங்கட்டும்.
கொ’பெ.பி.அய்யா.