புதுவையில் முதல் தீபாவளி
இல்லந் தோறும் புத்தாடை அணிந்து
இனிப்பு காரம் உவப்புடன் சுவைத்து
எல்லோரும் மகிழ்ந்து இருக்கும் நாளில்
என்னோடு இருவர் கிடந்தனர் பட்டினி.
உணவகம் எதுவும் செயல்பட வில்லை
ஒருசிறு கடையும் திறந்த பாடில்லை
கனவிலும் உணவைக் காண்பதற் கில்லை
கட்டாயப் பட்டினி கிட்டிய தண்டனை..
என்னைக் காண இருவர் வந்தனர்
இருவரும் கல்லூரி ஆசிரிய ராவர்.
தின்ன ஒன்று மில்லாத போது
தங்கிய விருந்தினர் பசிதீர்ப்ப தெப்படி?
உணவகம் பலவும் தேடி அலைந்தோம்
உள்ள வேட்கையும் கூடி வந்தது.
பிணமாகிப் போக வேண்டியது தானோ
பசியாற ஒன்றும் காணா நிலையில்?
வீதிகள் தோறும் மூடிய கடைகள்முன்
வண்ண எழுத்தில் விளம்பரப் பலகைகள்
ஓதின தீபாவளி திருநாள் வாழ்த்து.
ஒய்ந்தவர் வயிறு இன்னும் எரிந்தது.
உப்பளம் கேண்டீன் இயங்கு என்று
ஒருவர் செப்பியதென் காதில் விழுந்தது.
தப்பாது உடனே தொலைபேசிக் கேட்டேன்
தண்டம் அவர்க்கு விடுப்பாம் அன்று.
கால்கள் சோர்ந்து மெல்ல நடக்க
கலைவாணி ரொட்டிக் கடையை அடைந்தோம்
“கோள்கள்” போல அடுக்கிய ரொட்டிகள்
கொஞ்சி அழைத்தன பரிவுடன் எங்களை.
எதிர்கடை வெண்ணேய் இதமாய்ச் சேர்த்து
ஏப்பம் வரும்வரை உண்டு களித்தோம்
அதன்பின் புளித்த மோரும் சிறிது
அச்சத் தோடே குடித்து முடித்தோம்.
வந்த நண்பர்கள் மாலை சென்றனர்
விடை கொடுத்தேன் பெருவருத்தம் கூட.
எந்த நாளிலும் இந்நிலை காணேன்
எனக்கிது புதுவையில் கிடைத்த பரிசு!
(திருமணம் ஆகாத நிலையில் ஒருநாள் விடுமுறைக்காக தொலைவில் உள்ள சொந்த ஊர் செல்வது சரியல்ல என்றெண்ணி தீபாவளி அன்று புதுவையிலேயே தங்கிவிட்டேன் தீபாவளி அன்று அப்போதெல்லாம் உணவகங்களுக்கு விடுமுறை நாளாகும். இது தெரியாமல் இருந்துவிட்டேன். வந்த நண்பர்கள் இருவரும் புதுவையிலிருந்து 25 கி,மீ தொலைவில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள். தீபாவளிக்கு என்னை அழைத்துச் செல்ல வந்தவர்கள்.இரண்டாண்டு கழித்து சந்தித்தமையால் அரட்டையில் நேரம் வீணாக பட்டினிக்கு ஆளானோம்- 1979)