நண்பேண்டா

பாரதி ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் விழாக் கோலம் பூண்டிருந்தது .தோரணங்களும் ,அலங்கார வளைவுகளும் ,வண்ணக் கொடிகளும் திருவிழா போல் காட்சியளித்தது. இன்று பள்ளியின் ஆண்டு விழா !விழாவின் கூடுதல் சிறப்பம்சமாக பரிசளிப்பு விழாவுடன் பாராட்டு விழாவும் !சென்ற வருடம் பிளஸ் டூ வில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கிய பெருமை இப்பள்ளிக்கு !
விழாவுக்கு தலைமை தாங்க அரசியல்,சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் வந்திருந்தனர். மாணவர்களிடையே மிகுந்த உற்சாகம். கரஸ்பாண்டென்ட் ,ஹெட்மாஸ்டர் முகத்தில் பூரிப்பு,பெருமிதம்...! தம் பள்ளி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கியதால் நற்பெயர்.....! ஆனந்த் தான் அந்த பெருமைக்குரிய மாணவன் .அவன் அமைதியே வடிவாய் இருந்தான்.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் விஐபிக்கள் வீற்றிருக்க கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. நமது பள்ளிக்கு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கி பெருமை சேர்த்தது ஆனந்த் ! இத்தனை வருடங்கள் நமக்குக் கிட்டாத பேரும் புகழும் ஆனந்தால் நாம் பள்ளிக்கு கிடைத்துள்ளது.ஆனந்தை பாராட்டி பரிசளிப்பதில் நம் பள்ளி பெருமிதம் கொள்கிறது .மேடைக்கு வருமாறு ஆனந்தை அன்போடு அழைக்கிறேன் என்று ஹெட்மாஸ்டர் அழைக்க விண்ணதிரும்படியான கரகோஷத்துக்கிடையே மேடையேறினான் ஆனந்த். சபையோரைப் பார்த்து வணங்கியவன் மேடையிலிருந்தபடி கீழே எதிரில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவைப் பார்த்தான் .அப்படியே அவன் நினைவுகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.
பிளஸ் ஒன் வகுப்புகள் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அன்று எல்லோரும் ஆவலுடன் யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனந்த் மட்டும் வெறித்த விழிகளோடு அமர்ந்திருந்தான் . “மை டியர் ஃபிரண்ட்ஸ் ! இன்னைக்கு நம்ம கிளாஸ்க்கு ஸ்ரீலங்கா –லருந்து கிருஷ்ணா-ன்னு நியூ ஸ்டூடண்ட் வரப்போறான் !நாம எல்லாரும் அவன் கூட ஃப்ரெண்ட்லியா பழகணும்! டௌட் இருந்தா சொல்லித் தரணும் “ லீடர் சொல்லிட்டிருக்கும் போதே .....
சிவந்த நிறம் ,சுருள் முடி ,களையான சிரித்த முகத்துடன் கிருஷ்ணா வந்தான் .ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் கிளாப் பண்ணி வரவேற்றனர் ஆனந்தை தவிர ...!அதே நேரம் கிளாஸ் மாஸ்டரும் வந்துவிட்டார் . “குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ் ! நம்ம கிளாஸ்க்கு புதுசா வந்திருக்கிற கிருஷ்ணா கிட்ட நீங்க ஒவ்வொருவரா உங்கள இன்ட்ரொடியூஸ் பண்ணிக்குங்க !” லைன்னா ஒவ்வொருவரா அவங்கவங்க பேரச் சொல்லி அறிமுகப் படுத்திக்கொண்டனர் . ஆனந்த் டர்ன் வந்தபோது அவன் எழுந்திருக்கவுமில்லை,பேசவுமில்லை ! டேபிள் மேல் கைகளை மடக்கி தலையை சாய்த்துக் கொண்டான் .
“சரி சரி ...! அவன விட்டுத் தள்ளுங்க ...அவன் குணம் தெரிஞ்சதுதானே !முரட்டுப் பய ...முசுடு ! “ முறைத்தார் க்ளாஸ் மாஸ்டர் .
கிருஷ்ணாவுக்கு என்னவோபோல் இருந்தது .அவன் ஆனந்த் பக்கத்தில் சென்று அமர்ந்தான் .ஆனந்த் அவனை சட்டை செய்யவில்லை .இண்ட்ரவலில் கிருஷ்ணாவே ஆனந்திடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.
“ஐ ஆம் கிருஷ்ணா ...ஃப்ரம் ஸ்ரீலங்கா !”
கை கொடுக்க தட்டி விட்டான் ஆனந்த் . கிருஷ்ணா விடவில்லை .கன்னத்தை திருப்பி , “ எனக்கு ஒரு ஹாய் சொல்லக் கூடாதா ?”
“ உன் வேலயப் பாத்துட்டுப் போ.... படிக்க வந்தியா ...வந்த வேலயப் பாரு “ எரிந்து விழுந்தான் ஆனந்த். இப்படியே பத்து நாட்கள் சென்றது .கிருஷ்ணா பேசினாலும் ஆனந்த் முகத்தை திருப்பிக் போந்து திட்டி விடுவான் .இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு ஆனந்த் மேல் இனம்புரியா கரிசனம்.....!!
பெல் அடித்தது . ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஆனந்த் வெடுக்கென எழ நீட்டிக் கொண்டிருந்த கொக்கி அவன் கண்ணை பதம் பார்த்தது . “ஆ” வென அலறினான் ஆனந்த் ...!கண்ணில் தாளமுடியாத வலி ! கண் வீங்கி சிவந்து விட்டது . கிருஷ்ணா பதறியடித்து ,”ஆனந்த் ! என்னாச்சு ?கண்ணுல பட்டிருச்சா ? காமி ...!”
“எனக்கென்ன ஆனா என்ன ....? பொத்திட்டுப் போங்க...! “ கத்தினான் .
“நல்லா படட்டும் ...திமிரு புடிச்சவன் ....”: மற்றவர்கள் நகன்றனர் .
கிருஷ்ணா மெதுவாய் ஆனந்தின் தோளில் கைபோட்டு தலையைத் தடவி ,”வா ஆனந்த் ! டாக்டர் கிட்ட போகலாம் ...! உடனே பாத்துட்டா நல்லது .இரும்பு குத்தினதுல செப்டிக் ஆயிட்டா கஷ்டம் ...!”
“எனக்கு எல்லாம் தெரியும் நீ போ ...!”
“கண்ணுல ரொம்ப அடிபட்டிருக்கு ...கூட யாராவது வந்தாதான் நல்லது ஆனந்த் ! என்னை உன் கூடப் பொறந்தவனா நினைச்சுக்கோ ! உன் கோபத்த அப்புறமா காட்டு ....!”
மெல்ல நிமிர்ந்து ஒற்றைக் கண்ணால் கிருஷ்ணாவைப் பார்த்தான் .ஆண்டு முகத்தி தெரிந்த சாந்தமும் ,அமைதியும் ,அன்பும் ஆனந்தை என்னமோ செய்தது .
“வா! என்கிட்ட ஹாஸ்டல் மெஸுக்கு கட்ட வேண்டிய பணம் இருக்கு !மொதல்ல டாக்டர் கிட்ட காமிச்சிடலாம் .....!” மந்திரத்துக்குக் கட்டுண்டவன் போல் அவன் பின்னால் சென்றான் ஆனந்த் !
“ஆட்டோ ....ஐ ஹாஸ்பிடல் போங்க ...!
குனிந்தபடி உட்கார்ந்திருந்தான் ஆனந்த். அவன் தோள் மீது மெல்ல கை போட்டு அணைத்துக்கொண்டான் .
“ரொம்ப வலிக்குதா ஆனந்த் ? கொஞ்சம் பொறுத்துக்கோ...டாக்டர் இன்ஜெக்சன் பண்ணா வலி கொறஞ்சிடும் ....!
ஆனந்தின் கண்ணிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் கிருஷ்ணாவின் கையை நனைத்தன . “கல்லுக்குள்ளும் ஈரம் உண்டோ ? “
“நான் உன்னை எவ்வளவு உதாசீனப்படுத்தினேன் ? உனக்கு என் மேல கோபமே வரலாயா ...?”
“இல்லடா.... உன்னைப் பத்தி நம்ம கிளாஸ் பசங்க என்னென்னமோ சொன்னாங்க ! நீ ரொம்ப மூடி டைப்பாம் ...எரிஞ்சி விழ்வியம் ....படிப்பே உன் மடையில ஏறாதாம்....ஹோம்வொர்க் செய்ய மாட்டியாம் ....யாருக்குமே உன்னப் பிடிக்காதாமே ...?
“ஆமா கிருஷ்ணா ! வீட்ல நிம்மதியில்ல....சின்ன வயசுலயே அம்மா போயி சேர்ந்துட்டாங்க ...சித்தி எப்பபாரு திட்டுவாங்க ...அடிப்பாங்க...!அப்பா கண்டுக்க மாட்டாரு...ஸ்கூல்லயும் யாருக்கும் என்னப் புடிக்காது ...வம்புசண்டை, அடிதடிதான் ! அதான் யாற்கூடவும் நான் பேசறதே இல்ல !
மெல்ல கண்ணீரை துடைத்து விட்டான் கிருஷ்ணா ! “இங்கப் பாரு ஆனந்த் ! எங்க நாட்டுல எப்பவும் சண்டை,கொலை, கொள்ளைதான் !பச்சப் புள்ளனு கூட பாக்காம கழுத்த நெரிச்சி கொல்லுவாங்க! பெண் பிள்ளைகள பெத்தவங்க புருஷன் எதிரிலயே பலாத்காரம் பண்ணுவாங்க ...விடலப் புள்ளைகள புடிச்சுட்டு போயி கொன்னுடுவாங்க ! பட்டாசு சத்தம் மாதிரி குண்டு சத்தம் கேட்டுகிட்டே இருக்கும் ! கொடூரமான சூழல்ல இருந்துதான் நான் இங்க படிக்க வந்திருக்கேன் !உன்னைப் பார்த்தா மிலிட்டரிகாரன் சுட்டதுல செத்துப்போன என் தம்பி மாதிரியே இருந்துச்சு ...! அதனாலயோ என்னமோ உன் மேல தனி பாசம் வந்துச்சு ...! மனசெல்லாம் மரத்துப்போன நானே நல்லாருக்கேன் ....! நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காதே ! உன் கவனத்த எல்லாம் படிப்புல காட்டு !வெறியா படி....நல்ல பேரெடுக்கலாம் !”
கிருஷ்ணா விதைத்த அன்பு விதை மெல்ல முளைவிடத் தொடங்கியது.மேலும் அதற்கு நீர் ஊற்றி ,உரமிட்டு வளர்க்க விளைச்சல் அமோகமாய் இருந்தது . வகுப்பில் கடைசி மார்க் வாங்கியவன் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தான் .முகத்தில் தெளிவு! அவனுள் தன்னம்பிக்கை வேரூன்றியது!அவ்வப்போது சில அறிவுரைகளை ஆனந்துக்கு கூறுவான்.
“ஆனந்த் !உலகத்திலுள்ள எல்லா மதமும் போதிக்கிறது அன்பு ஒண்ணைத்தான் ! அன்புங்க்ற ஆயுதத்துக்கு முன்னால வேற எதுவும் நீக்க முடியாது !ஃபேமிலியானாலும் சரி வேற எந்த இடமானாலும் சரி ...இத நீ ட்ரை பண்ணி பாரேன் ...நம்ம தலைஎழுத்தே மாறிடும் ...! “படிப்பில் நம்பர் ஒன் ஆனான் ! பிளஸ் டூ வில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் !
மேடையில் மனதில் மோதிய நினைவலையால் காணீர் பெருக்கெடுக்க கிருஷ்ணாவைப் பார்த்தவன் மைக்கில் ,” அனைவருக்கும் வணக்கம் ! நான் இந்த நிலையில் இருப்பதற்கும் ,ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கியதற்கும் என் நண்பன் கிருஷ்ணாதான் காரணம் ! அந்த அன்பு தெய்வத்தின் கரங்களாலே ஷீல்ட் வாங்குவதையே நான் வாழ்நாள் பெருமையா நினைக்கிறேன் ....!”என்று சொல்ல .....விழிநீர் வழிந்தோட கிருஷ்ணா மேடையேற கைதட்டல் காதைப் பிளந்தது . ஆரத் தழுவிக் கொண்ட இருவரின் அன்பில் கரைந்து வானமும் பன்னீர் தூவி வாழ்த்தியது ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Jan-14, 11:19 pm)
Tanglish : anbu vellum
பார்வை : 224

மேலே