இருக்கின்ற இடத்தை விட்டு

இருப்பதற்கு ஏதேனும் இடம் இருந்தால் போதுமென்று
எத்தனையோ பேர் ஏங்கி இருக்கையிலே
எண்ணற்ற இடங்கள் நீ
ஏகாந்தமாய் இருப்பதற்கு !

வாகன ஓட்டுனரின் வண்டிக் கைப்பிடியில்
வகையாகத் தொங்கி வீதியெல்லாம் வலம் வருவாய்

சுட்டித் தனம் செய்யும் சின்னச் சிட்டுக்கள்
தட்டித் தாளமிடும் மத்தளமாய் மாறிடுவாய்

தோளை அணைத்து வரும் துணைவியர் மடிமீதில்
சொகுசாய் அமர்ந்து, பார்ப்பவரைச்
சுண்டி இழுத்திடுவாய்

மடியென்ற இடம் மாறிப் பின்னர்
கரம் பிடிக்க இருக்கின்ற கம்பியிலே இணைந்திடுவாய்

உடனமர்ந்து வருவதொரு ஒய்யார அழகிஎன்றால்
அவளுடைய தலையை மட்டும் அலங்கரித்துக் கொள்கின்றாய்

இத்தனை இடம் இருந்தும்
ஏ ஹெல்மெட்டே உனக்கு
ஓட்டுனர் தலையில் மட்டும்
உட்கார இடமில்லையா ??

எழுதியவர் : (21-Jan-14, 11:27 am)
பார்வை : 169

மேலே