வாசலும் சன்னலும்

வாசலும் சன்னலும்
=========================================ருத்ரா

வாசல் வழியே
வருவாய் குடத்துடன்
ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க என்று

என் வீட்டு ஜன்னல் வழியே
விழிகள் வீசி வைத்திருந்தேன்
வலை விரித்து.

வலையில் விழுந்ததோ
ஒரு கீரைக்காரி.
மல்லிகைப்பூக்கூடைக்காரி.
பக்கத்துவீட்டு இரு மாமிகளின்
ஐ.நா சபையாய்
உன் வீட்டு வாசலில்
சள சளப்புகள்.

ஒரு வழியாய்
வந்தாய் குடத்துடன்.
உன்னைப்பின் தொடரலாம்
என்ற என்னைப் பார்த்துவிட்டாய்.

ஆனால்
ஏன் திடீரென்று
வழிய வழிய குடம்
இடுப்பில் இருப்பது போல்
வீட்டுக்குள் திரும்பி விட்டாய்.
ஓ!
குடத்தில் என் இதயம்
கொப்புளிக்கிறதோ!

"ஏண்டி
வந்து விட்டாய்.
வெறுங்குடத்தை தரையில்
போட்டுவிட்டாய்."

"போம்மா
குடம் வழுக்கிவிழுந்து
தரையெல்லாம் நீர்.
துடித்து துடித்து
ஓடுகிறது.."

"என்னடி
தண்ணியும் இல்லை
தவக்களையும் இல்லை.
என்ன துடிக்கிறதாம்..
வெறுங்குடம்
உருண்டு கிடக்கிறது..
உனக்கு என்னாச்சுடி?
என்னங்க இங்கே வாங்க
உங்க பொண்ணுக்கு
என்னம்மோ ஆச்சு?'
அம்மா பதறினாள்.

"இருடி கத்தாதே"
அப்பா சாவகாசமாய்
"தெ ஹிந்து"வை
இஞ்சு இஞ்சாய்
சவைத்துக்கொண்டிருந்தார்.
செய்திகளை அல்ல‌
இங்கிலீஷை!

"இங்கே சட்டுன்னு வாங்களேன்."

குடம் எடுத்துக்கிட்டு
தண்ணி எடுக்கிற கூத்ததானே
சொல்றே.
அவ சுமந்தது போதும்.
நாம இனி சொமக்கவேண்டியதுதான்
ஜாதக நோட்டை.

அடி பாவி
என் இதயத்தை அள்ளிப்போய்
அங்கேயே இறைச்சுகிட்டு இருக்கே.

நீ இந்த தாமிரபரணியிலெ
குளிக்க வருவே
இன்று அது நைல் நதி.
நாளை அது மஞ்சள் நதி.
அப்புறம்
அது வால்கா தேம்ஸ்னு
நம்ம காதல்ரசம் அதில்
அலைவிரிக்க‌
அல்லாடிகிடிருந்தேனே.
இப்படி
ஜோஸ்யக்கட்டத்துக்குள்ள‌
சோழி குலுக்க வச்சுட்டியடி!

என் "டீ"அவளுக்கு கேட்டு
இனிச்சிருக்கும்.
அவள் "டா" வை
இனிக்க இனிக்க அனுப்பினாள்
ரகசியமாய்..

மொக்க போட்டதெல்லாம் போதும் டா

கல கல வென்று சோழி குலுங்கியது
அவள் சிரிப்பு!.

"அட போம்மா
அது வெறுங்குடந்தான்.
இனி ஆத்துகெல்லாம் போகமாட்டேன்.
வாசல்ல கோலம் போடற‌தோட சரி."

இனி
என் சன்னல் அவள் வாசல்.
அவள் வாசல் என் சன்னல்.

=======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (22-Jan-14, 3:10 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 47

மேலே