பாலைவனத்தின் நடுவினிலே விடப்பட்ட குழந்தை நான்

சட்டென்று
அந்த
அழகிய சொர்கவனம்
வேனிலில் சங்கமித்து
கானலாகிப் போனதுவே..!!

உள்
இதழ் விரித்து
மகரந்த மனம் வீசி
இளங் காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த
மனமாய மலர்கள் எல்லாம்
வண்ணம் கரைந்து
ஒருசேர பொசுங்கி
அந்த காற்றுடனே கரியானதுவே..!!

அஞ்சுகமே.. ஆருயிரே.. என்று
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
ஊர் சிட்டுக் குருவிகளின்
ஆனந்தக் கூச்சல்கள் எல்லாம்
எவரோ
உண்டி வீசி
விரட்டி அடித்ததுபோல்
பெரும் ஓலமிட்டு பறந்து போனதே..!!

என்னோடு
சுற்றித் திரிந்து
இதம்தந்து
சுகம் தந்த வெண்ணிலவும்
கண்முன்னே காணாமல் போனதுவே..!!

ஒழுகிய
தார் சாலையும்
பழகிப் புளித்த கட்டடங்களும்
கண்களின் கசிவினில் தெரிகிறதே..!!

எட்டுத் திசை
நோக்கினும்
ஏளனப் பார்வை பார்க்கும்
மனம் சுருங்கிய
வண்ணமில்லா
மனித முகங்கள் தென்படுகிறதே..!!

வசைபாடிக் கொண்டே
செல்லும்
வாகனக் கூட்டங்களின்
குத்தூசிக் கூச்சல்கள்
செவித்திரை இதழ்களை சிதைக்கின்றதுவே..!!

அக்னியின் உச்சத்தில்
உச்சியிலே நிற்கும் சூரியனும்
என்னை
உலைக்குள்ளே கிடக்கும்
பருகாக்கி வதைக்கின்றதே..!!

இதுவரை
என்னுடன்
பேசிக்கொண்டே
காதலுக்குள் அழைத்துச் சென்ற நீ
நேரமாகிவிட்டது
நான் வருகின்றேன் என்றவுடன்..

நந்தவனத்தில்
நடை பழகிக் கொண்டிருந்த
ஒரு வயது குழந்தையை
பாலைவனத்தின் நடுவினிலே
விட்டுச் சென்றதுபோல்
திசை தெரியாமல்
பரிதவிக்கின்றேன் நானும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (25-Jan-14, 11:53 pm)
பார்வை : 76

மேலே