பொங்கல் கவிதை போட்டி முடிவுகள்

வணக்கம் தோழமைகளே....

தாங்களின் அன்பான ஆதரவோடு பொங்கல்விழா கவிதைபோட்டி சிறப்பாக நடந்து முடிந்ததில் மிகுந்த சந்தோசம் அடைகிறோம்...!

இந்த கவிதை போட்டியின் நோக்கம் உங்களை எழுத தூண்டும் உந்து சக்தியாக இருப்பதும், சிறப்பான படைப்பாளிகளை அனைவருக்கும் அறிமுகம் செய்வதுமே ஆகும், அப்போ நாங்கள் எல்லாம் சிறப்பான படைப்பாளிகள் இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கான அரங்கேற்றங்கள் உங்களுக்காகவே காத்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை, களத்தில் நீங்கள் அனைவரும் நின்றீர்கள், உங்களில் சிலர் முன்னே வருகிறார்கள், நீங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறீர்கள் உங்கள் இலக்கை நோக்கி,- நிச்சயமாக நாளை நீங்களும் உங்களுக்கான இடத்தை நிரப்புவீர்கள் என்று நம்புகிறோம்.

2012, 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு போட்டிகளில் பரிசினை வென்றவர்கள் பட்டியல்...!
1.ரமேஷாலம்
2.கோவை ஆனந்த்
3.மோசே
4.சுகன்யா
5.நிலவை பார்த்திபன்
6.ஜோசப் ஜூலியட்
7.ரவிச்சந்திரன்
8.மலைமன்னன்

இந்தமுறை புதியதாக மூன்றுபேர் இந்த பட்டியலில் இணைய போகிறார்கள், அவர்கள் யார் என்பதை அறிய நீங்களும் காத்திருக்கிறீர்கள், இதோ கூறிவிடுகிறோம்...!

1.முதல் பரிசு வென்ற படைப்பு
*********************************************
!!!சமத்துவப் பொங்கல் பொங்கணும்!!!

மாற்றான் சிரமதில் மணிமுடி சூடி
==மறவன் என்றவன் புகழ்தினம் பாடி
போற்றும் நிலையதன் கதவுகள் மூடி
==புதுமை சரித்திரம் படைப்பதை நாடி
காற்றில் புயலாய் தமிழின மெழுந்து
==காலில் செருப்பாய் கிடப்பதைத் தவிர்த்து
ஆற்றல் வளமுள ஊற்றாய்ச் சுரந்து
==அவனியி லுரிமை பொங்கல் பொங்கணும்.

சிதறியத் தேங்காய்த் துண்டெனத் தமிழினம்
==சிதைத்திடச் செய்தவர் நகைப்பினைக் கண்டும்
பதறிடா திருந்திடும் மனநிலைக் கொண்டு
==பலிக்கடா போலவே வாழ்வதை விடுத்து
கதறியக் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து
==கடலினில் நீராய் ஓரிடம் சேர்ந்து
முதலிடம் தமிழன் முகவரி யாகிட
==முனைவது தமிழரின் மூச்செனக் கொள்வோம்

பன்னிரு கோடிகள் சனத்தொகை மிகுந்த
==பழங்குடி தமிழினம் ஐக்கியம் தொலைத்து
தன்னிறை வெய்திடா திருப்பத னாலொரு
==தனித்துவ மிழந்துத் தரணியில் இன்னும்
பின்னடை வடைந்து செல்வதைத் தடுத்து
==பின்வரும் சந்ததி கைகளில் தமிழின்
சந்நிதி வாசலின் திறவுகோல் கொடுத்து
==சமத்துவப் பொங்கல் வைப்பது அவசியம்!


---எழுதியவர் - மெய்யன் நடராஜ் (இலங்கை)

இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு
*********************************************
!!!உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையே வெண்ணிலாவே - அந்த
நீலவிண்ணின் ஓரத்திலே வெண்ணிலாவே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்தே யார் மறைத்தது கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதல்மனம் கனிய வைப்பாய் வந்திடுநாளை
சாற்றுவதை யாரிடத்தில் சொல்லிடுவேனோ - இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயோ

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும்.

-------கிரிகாசன்.

மூன்றாம் பரிசு வென்ற படைப்பு
***********************************************
!!!தமிழனென்றால் உரைக்கணும் புத்தி!!!

ஆதியில் தோன்றி அகிலத்தை ஊன்றி
நீதியில் வாழ்ந்த நீதாண்டாத் தமிழன்,
பாதியில் வந்த பகடையர்க்குரிமை
பகிர்ந்தளித்தாயே அதில் நீ வழுக்கன்!

பாரினிலெவனும் பரிதவித்தாலும்
முதற்கண் சிந்திடும் மூத்தவன் தமிழன்,
ஆரிறுகோடி சிதைந்ததனாலே
அடிமையான அவலன் தமிழன்!

நாகரிகத்தை உலகிற்களித்தாய்
நல்லறிவினையே குறளில் உதிர்த்தாய்,
வீரக்காவியம் நீயும் படைத்தாய்
செம்மொழி இலக்கணம் நயமாய் வடித்தாய்!

மண்ணை உழுது விதையை விதைத்தாய்
மனதை உழுது மனிதம் விதைத்தாய்,
ஏட்டை உழுது பாட்டை விதைத்தாய்
எதிரியை உழுது வெற்றிகள் படைத்தாய்!

அகிலம் போற்ற வாழ்ந்த தமிழன்
ஒற்றுமையற்று உடைந்ததனாலே
மூத்தகுடியோ தாழ்ந்தது இன்று
முகவரிகூட தொலைந்தது இழுக்கு!

தமிழ்த்தாய் என்றால் பிறக்கணும் பக்தி
தமிழனென்றால் உரைக்கணும் புத்தி
உலகை ஆள இருக்குது சக்தி
ஒன்றாய் வாழ்ந்து அடைந்திடு முக்தி!


---சிவகாவிய தாசன்.

மற்ற அனைத்துப்படைப்புகளுமே வாழ்த்துக்குரிய படைப்புகள் ஆகும், சொன்னக் கருவை ஆழமாக உள்வாங்கி அதை உணர்வாக கவித்துவமான நடையில் சிறப்பாக படைப்புகளை தந்த இந்த மூவரும் பரிசு வென்றவர்கள் பட்டியலில் இணைகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்

=========================
மிக சிரமப்பட்டு மொத்த படைப்புகளையும் சலித்து தலா இருபது இருபது படைப்புகளை சிறப்பாக தேர்வு செய்த முதல் கட்ட நடுவர்கள்.

உயர்திரு கோவை ஆனந்த் அவர்கள்
உயர்திரு K . S கலை அவர்கள்
============================
அவர்கள் தேர்வு செய்த 40 படைப்புகளையும் 20 20 தாக பிரித்து பல நடுவர்களுக்கு அனுப்பினேன், அவர்கள் அதை சல்லடை போட்டு சலித்து மிக சிறப்பான 20 படைப்புகள் தந்தார்கள். அப்படி சிறப்பாக பணியாற்றிய இரண்டாம்கட்ட நடுவர்கள்....

உயர்திரு கே பி அய்யா அவர்கள்
உயர்திரு ஜோசப் ஜூலியட் அவர்கள்
திருமதி சொ. சாந்தி அவர்கள்
திருமதி தாரகை அவர்கள்

==========================
இரண்டாம்கட்ட நடுவர்கள் தேர்வில் கிடைத்த 20 படைப்புகளை 10 10 ஆகா பிரித்து, மூன்றாம்கட்ட நடுவர்களுக்கு அனுப்பி அதில் இருந்து சிறப்பான 6 -- 6 படைப்புகளை தேர்வு செய்து தரும்படி கூறினேன், அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு, படைப்புகளை ஆழமாக ஆராய்ந்து தலா 6 மொத்தம் 12 படைப்புகளை தந்தார்கள், அப்படி சிறப்பான பணியாற்றிய நடுவர்கள்.

உயர்திரு நிலவை பார்த்திபன் அவர்கள்
உயர்திரு வெள்ளூர் ராஜா அவர்கள்

===============================
தேர்வாகிய 12 சிறந்த படைப்புகளையும், சிறப்பு தேர்விற்காக சிறப்பு நடுவர்களுக்கு அனுப்பினேன், அதில் 6 படைப்புகளை தேர்வு செய்து தர சொன்னேன். அவர்களும் 12 படைப்புகளையும் ஆராந்து சிறப்பாக செயல்பட்டு சிறந்த 6 படைப்புகளை தேர்வு செய்து தந்தார்கள்,

உயர்திரு அகன் அவர்கள்
உயர்திரு பொள்ளாச்சி அபி அவர்கள்

==================================
சிறப்பு தேர்வில் தேர்வாகி வந்த 6 படைப்புகளையும் (கவிஞர் ,புகழ் பெற்ற மெய்ப்பு நோக்கு அறிஞர் ,பதிப்பகத்தார்.) உயர்திரு விழி. தி .நடராஜன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரால் 6 ல் மூன்று சிறப்பான படைப்புகளை தேர்வு செய்யப்பட்டது.

============================
அந்த மூன்று படைப்புகளும் .(புகழ் பெற்ற் துளிப்பா படைப்பாளி) புதுவை. தமிழ் நெஞ்சன்(புதுக்கவிதை படைப்பாளி ) உயர்திரு சீனு தமிழ்மணி அவர்களுக்கு அனுப்பி- ஒன்று, இரண்டு, மூன்று என தரம் பிரிக்கப்பட்டது, பிறகே இந்த இறுதி அறிவிப்பு தாங்களின் மேற்பார்வைக்கு சமர்பிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமைகளே பரிசு வென்ற படைப்பாளிகளை உங்கள் மனதார பாராட்டுங்கள் அவர்களின் மனம் மகிழட்டும்,

முயற்ச்சியையும் பயிர்ச்சியையும் கைவிடாது தொடர்ந்து நமது பயணத்தை துவங்குவோம், அடுத்த இலக்கை நோக்கி.

நன்றிகள் தோழமைகளே...
இப்படிக்கு
திருவிழாக்குழு.

குறிப்பு;-
பரிசை வென்ற படைப்பாளிகள் தங்கள் இல்ல முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவைகளை தனி விடுகையில் உடனே அனுப்பும்படி வேண்டுகிறோம்,

''எங்களுக்கு களம் தந்த எழுத்து தளத்திற்கு எங்கள் திருவிழாக்குழுவின் சார்பாக எங்கள் முதற்கண் நன்றியினை என்றும் உரித்தாக்குகிறோம்''.

எழுதியவர் : திருவிழாக்குழு. (30-Jan-14, 5:02 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 237

மேலே