பெத்தவளே
அடிநூறு பாத்துவச்சு,
ஆசப்பட்டு
உயிர் தொடுத்துவச்சு,
பத்திரமா பத்துமாசம்
வதங்காத பூமாலையை
வலிதாங்கி
பெத்தவளே...
முந்தானை பால்ஒதுக்கி,
முந்தியிலே மறச்சுவச்சு,
பிஞ்சுக்கு முதல்விருத்து
முத்த்த்தோடு
கொடுத்தவளே...
ரெண்டுகை எடுத்துவச்சு
நாலுகால் நடவச்சு,
வீட்டுமுத்தம்
முழுசையும்,
முறப்படி நான் அளக்க,
வாசக்கத ஓரத்தில
ஒளிஞ்சு நின்னு
பாத்தவளே....
கூண்டுக்கிளி பேச்சுபோல
குரல்நடுங்க
குருதி நடுநடுங்க,
மொழிதெரியா
பாசை நான்பேச,
வீடெல்லாம் ஓடிபோய்
என்பேச்ச
சொன்னவளே....
பால்வாடி செல்லயிலே,
பத்து எண்கள் நான்
சொல்லையிலே,
குறிஞ்சிமுகம் நீ
சிரிச்சுக்கிட்டே,
செல்லக்கடி
கடிச்சவளே....
மதியச்சாப்பாட்டுக்கு
மறச்சுவைச்ச
கோழிமுட்டை,
நேர்முகமா சொல்லுதடி,
உன் அன்பு என்னுள்
பின்னுதடி...
பக்கத்து வீட்டுபய
விளையாட்டா
என்ன அடிக்கையில,
ஆத்தாடி,
எங்கம்மா,
சாமி ஆட நான் கண்டேன்..
செய்யாத சேட்டைக்கு
செஞ்சுத்தந்த கழி,
நச்சுன்னு நடுமண்டையில,
நசநசன்னு சொல்லுதே...
பத்து மாசம் சுமந்தவளே.,
பாத்துபாத்து வளத்தவளே,எனக்காக,
கல்பாறகனம் சுமந்தவளே
உனக்காக நான்ஒன்னும்
உருப்படியா பன்னலயே...