பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன்

பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ?

' படைப்பாளிகள் ஒரு போதும் பிறப்பிக்கப்படுவதில்லை மாறாக
அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்'

என்ற வாக்கிற்கேற்ப மனிதன் பிறந்த பிற்பாடே படைப்பாளி உருவாகிறான் . கவிஞன், கட்டுரையாளன் ,சிறுகதையாசிரியன் ,பாடலாசிரியன் ...என பல்வேறு படைப்பாளிகளை இன்னும் இனங்காட்டலாம் அந்த வகையில் நோக்கும் போது இவ்வாறான படைப்பாளிகள் உருவாகக் காரணம் அந்தப் படைப்பாளியின் அயராத வாசிப்பும் ஓயாத எழுத்தாற்றலும் என்று ஒரு வகையில் சொன்னாலும் நாம் மிக கூடுதலான பங்களிப்பினை வாசகர்களுக்கே கொடுக்க வேண்டிய அவசியம் இங்கே காணப்படுகிறது. அதிலும் வாசகன் ஒரு சிறந்த படைப்பாளியாக மிளிர்கின்ற ஒருவராக இருக்கும் சமயத்தில் இப்படிப்பட்ட வாசகர்களின் அருமை பெருமையான கருத்துக்களே ஏனையோரை இவ்வுலகில் சிறந்த படைப்பாளிகளாக மாற்றுவதற்குத் துணை நிற்கின்றது.

உதாரணமாக ஒரு பத்திரிகையிலோ அல்லது ஓர் இணையத்திலோ ஒருவர் எழுதுவதற்காக முயற்சி ஒன்றை எடுத்திருக்கின்றார் என்றால் அவரை எந்தவித பாராபட்சமும் இன்றி படைப்பாளிகள் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் . ஏனென்றால் கவிஞன்( படைப்பாளி ) உருவாக்கப் பட வேண்டியவன். அவர் மனது இன்புற வேண்டும் .அவருக்கான ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் தேர்வு செய்திருக்கும் இந்தத் துறையில் முன்னேற்றம் கண்டு சாதனை படைப்பதற்கான ஊன்றுகோள்களை எந்தவித மனக் கலக்கமும் இன்றி வழங்குவதே இன்னொரு கலைஞனின் தாராள மனப்பாங்கு ஆகும் .

புதிதாக ஒருவர் கட்டுரையோ, கவிதையோ, துணுக்கோ, சிறுகதையோ எழுதிப் பதிவேற்றம் செய்கின்ற வேளை நிச்சயமாக அதில் பிழைகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன . இச்சந்தரப்பத்தில்தான் இன்னொரு படைப்பாளி தனது தாராள குணத்தையும் நளின தன்மையினையும் காட்ட வேண்டும் என்பது அவரவர் சிறந்த குணங்களுக்குரிய பண்புகளாகும் . இவ்வாறான பண்புகளே எமது சமூக கலாசார பண்பாட்டு விழுமியத் தன்மைகளை தகுந்த தரம் கொண்டவையாக தக்கவைத்துக் காட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இலலை என்றே எண்ணுகின்றேன்.

அதற்கு மாறாக ஒரு புது அல்லது நடுத்தர படைப்பாளி ஒருவரினால் வழங்கப்படும் ஆக்கம் ஒன்றிற்கான ஊக்கம் ,கருத்திடல் மிக மோசமான முறையில் வழங்கப்படும் போது வாசலில் நட்டு வைத்த வாழைச் செடியை அடியோடு அறுப்பது போன்ற செயலாகிவிடும். இவ்வாறான வட்டங்களில் பல மூத்த படைப்பாளிகளே காணப்படுகிறார்கள் . கவிதை துறையில் ஒருவர் முன்னேற்றம் கண்ட ஒருவராகக் காணப்பட்டால் உடனே அவரிடம் 'தான்' என்ற அகங்காரம் கர்வம் ஆணவம் குடிகொண்டு விடுகின்றது. எவருடைய படைப்புளையும் மதிக்கும் தன்மை அவரிடம் இருக்காது அவருடைய படைப்பை மட்டுமே முனைப்பாய்க் காட்டிக் கொள்வதில் சுயநல அக்கறை கொள்கிறார் . என்றால் இது பொருத்தமான ஒன்றல்ல.

ஒரு படைப்பாளியை உருவாக்க வேண்டிய பொறுப்பு இன்னொரு படைப்பாளியின் கையிலேதான் உண்டு. சிறந்த படைப்பாளிகள் ஏனையோரை கைவிட்டுச் செல்லும் இவ்வகையான நிலைப்பாடு வருந்தத்தக்கது.

வயல் ஒன்றினை அறுவடை செய்துவிட்டு நெல் மணிகளுக்குள்ளே இருக்கும் பதர்களை நீக்காமல் மீண்டும் விதைப்பதற்காய் அவற்றை பயன்டுத்துவது போன்ற செயல் இவ்வகையானது .இப்படியான செயல் வெறும் மணல் வீடுகள் மட்டுமே அவை என்றும் கரைந்து போகக் கூடியவை என்பதை சிந்திக்கத் தவறி விடுகிறார்கள் . தாங்கள் வாழ்த்துக்கள் பகர்வதனால் ஏதும் குறைந்து போவதாக எண்ணிக் கொள்கிறார்கள் . இவ்வாறான மனம் கொண்டுள்ள படைப்பாளிகள் உடனே உங்கள் உயர்ந்த குணங்களை உயர்த்தி அக்குணங்களில் கொடியேற்றிப் பறக்க விடுங்கள் . துர்க்குணங்களைக் காலின் கீழே போட்டு மிதித்து இலக்கிய உலகம் வழி வழியாக விழி போல பாதுகாக்கப்பட துணை புரிவீர்களாக!

மேலும் விருப்பம் கொண்டு எழுத வருகின்ற ஒரு படைப்பாளியின் ஆக்கங்களைப் பழித்துரைப்பதாலோ கொச்சைப்படுத்தும் நக்கல் செய்யும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதாலோ எதுவும் கிடைக்கப் போவதில்லை . ஓரு குழந்தை வயிற்றில் இருந்து வரும் போதே கழுத்தை நெறித்து சாகடிப்பதற்கு சமமான ஒரு கொடூரச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள தவறி விடக் கூடாது . மனதை நோகடிக்கும், மனோ வேதனைக்கு உட்படுத்தும் சில காட்டு மிராண்டித் தனமான உங்கள் வார்த்தைகள் ஒரு படைப்பாளியை எதிலும் வாஞ்சையற்றவனாக மாற்றி விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுச் செல்லும் சில விடங்களை கலைஞர்களாகிய அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

படைப்பாளி என்பவன் பல பிழைகளைச் செய்து ஆக்கங்களை தந்தாலும் எடிசன் போல கொஞ்சம் கொஞ்சமாக அவன் திருந்தி சிகரத்தை தொடுவதற்கு எத்தனிக்கும் வேளை அல்லது தொட்டு விட்டால் அவனைத் தரக் குறைவாக நினைத்தோரின் நிலை என்னாவது ??? நிச்சயமாக அவன் ஒரு நாள் முன்னேறிச் செல்வதற்கான சந்தரப்பங்கள் என்றும் காத்துக் கொண்டே இருக்கிறது . அப்போது வீணாக நொந்து போவது யார்?

ஆகவே இலக்கியப் போக்கில் வாஞ்சை கொண்டு புகுந்து வரும் தென்றல் செல்வங்களுக்கு பூஞ்செடிகள் நட்டு உலகை அழகாய் அலங்கரிப்போம். நெற் குவியல் ஒன்றின் நெல் மணிகளை பதர் நீக்கி விதைக்கப் புறப்படுவோம். விளைச்சல் கண்டிடுவோம். இங்கே நுழைந்து கிடக்கும் களைகளை நீக்கி கார் மழை கொட்டும் வகையில் மழை தரக்கூடிய கலைச் செல்வத்தை கண்போல் பாதுகாப்போம்.

எழுதியவர் : இமாம் (2-Feb-14, 5:43 pm)
பார்வை : 137

மேலே