கல்லணைக்கோர் பயணம்21
கல்லணைக்கோர் பயணம்..21
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
குடிசை கோபுரமாகிப்போனது
எங்கள் மனதில்
அவர்கள் அன்பினால்,
வாய்க்காலின் கரைகளில்
இதயவடிவ இலைகள்
ஈர்த்தது அழகாய்
காற்றின் அசைவுகளுக்கு
உருவம் கொடுத்து
அழகாய் நடனம்
அற்புத அசைவுகளில்
நின்று ரசித்தோம்
அழகுச் சிரிப்பினை
எங்கள் பகுதிகளில்
வாய்க்காலின் கரைகளில்
செறிந்து கிடக்கும்
சேமலை செடிகள்
சேப்பங் கிழங்கின்
தாய் அவள்
குளிக்கும் பொது
நண்பர்களின் மேல்
நீர் தெளிப்பதைவிட
சேமலையின் மேல்
நீர் தெளிக்க
சிலிர்த்துக் கொள்வாள்
நாணத்துடன் நளினமாய்
ஒருதுளி ஒட்டாது
அவள் மேனியில்
சிலநேரங்களில் இலைகளை
கொய்து நீர்நிரப்பி
குலுக்கும் வேளைகளில்
இரத்த சிவப்பாகும்
குலுக்கிய நீர்
பச்சை இலைகளில்
சிவப்பு வர்ணம்
ஆச்சர்யம் தரும்
அந்நாட்களில் ..
கொய்யும் வேளைகளில்
சிந்தும் கண்ணீர்
கைகளில் அரிக்கும்
சிறிது நேரம்,
விளையாட்டு பருவத்தில்
அந்தநேரம் பயந்து
அடுத்தநேரம் மறப்போம்
எப்பேர்பட்ட வலியையும்,
வாய்க்காலின் கம்பீரத்தை
மெருகேற்றியது சேமலைகள்
சிரித்த முகத்துடன்..
கரைகளின் காவலனாய்
வாய்க்காலின் காதலியாய்
இயற்கையின் அரணாய்
சத்துள்ள உணவாய்
பல்வேறு பரிமாணங்கள்
சேமலையின் செழிப்பிற்க்குள்..
பிச்சை பாய்
சுல்தான் பாய்
கடைகளில் கறிவாங்க
ஒயர் கூடை
எடுத்து செல்வோருக்கு
சேமலை சுற்றி
கொடுத்தனுப்புவர் கறியை,
சேமலையின் அழகை
நின்று ரசிக்கையில்
நினைவில் வந்துபோயின
மேற்கண்ட சம்பவங்கள்
வாய்க்காலின் நீரை
வாரி இறைத்தோம்
சிரிக்கும் சேமலையின் மேல்
வெட்கத்தில் திருப்பிக்கொண்டாள்
வேகவேகமாய் முகத்தை..
(பயணிப்போம்..21)
இடம் ; இடையாற்றுமங்கலம்
புகைப்படம் : ஆரோக்ய பிரிட்டோ