கரிசல் மண்ணில் ஒரு காவியம்—8

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.—8
அத்தியாயம்-8

எதிர் பாராதவிதமாக திடு திப்பென்று ஒருவர் தன் சட்டையைப் பிடித்து உலுக்கியவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான் ராஜா.
“டேய் கேக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சியா!உனக்கு என்னடா அவ்வளவு துணிச்சல்”எனப் பேசிக்கொண்டே அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.அதோடு விடவில்லை அவனைக் காலால் உதைத்துக் கீழே சாய்த்து முரட்டுத்தனமாக மாறி மாறி அடித்தான்.இதைக்கண்ட ராஜாவின் தாயார் அவன் மேலே விழும் அடிகளை தடுக்க முயன்று கதறி அழுதுகொண்டே அவனுக்கு விழும் அடிகளை அவளே வாங்கினாள்.இந்தக் கொடுமையை பார்த்த ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

நடந்த பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லாமல் உள்ளே புகுந்து அடாவடிசெய்த அந்த வில்லனை நடந்த நிகழ்வுகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நடுநிலைக்கூட்டம் அவனை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து விலக்கிவிட்டனர்.அவன்தான் ஏழுவழியான் ஏழுமலை.ஊருக்கு ஒரு சகுனி இருப்பான் என்று சொல்வார்கள் அல்லவா,அவன்தான் இவன்.ஊருக்குள் குழப்பம் விளைவித்து ஊர் மக்களை காவல் நிலையத்திற்கு அலைய விட்டு வீண் செலவு செய்ய வைத்து அதிலே வயிறு வளர்க்கும் வம்புக்காரன் இவன்.கிராமப் பஞ்சாயத்து தேர்தல் வந்தாலே இவனுக்கு நல்ல வேட்டைதான்.கிராமத்தில் போட்டி இல்லாமல் ஒரு நல்லவரை பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என கிராமம் முடிவெடுத்தாலும் இவன் அதற்கு உடன்பட மாட்டான்.எவனையாவது ஒரு ஏமாந்தவனை உசுப்பேற்றி போட்டியை உருவாக்கி அந்த அப்பாவியை கடனாளியாய் ஆக்கிவிடுவான்.

ஆகவே இந்த ஏழுவழியானைக்கண்டாலே ஊரில் பெரும்பாலான மக்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.அதனால்தான் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அன்று ஆத்திரம் தீர அடித்துத் துவைத்துப் பிழிந்து விட்டனர்.ஊரே ஒன்று கூடிவிட்டதைக்கண்ட அவன் துண்டைக்காணோம் துணியைக்காணோம் எனத் தப்பித்து ஓட்டம் பிடித்து விட்டான்.இதுதான் கிராமத்துக்கும் நகரத்துக்கும் உள்ள வேறுபாடு.நகரத்தில் அக்கம்பக்கம் வீட்டார் என்றுகூட அண்டிப்பழகமாட்டார்கள் அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் எந்திரத்தனமான வாழ்க்கை வாழ்வார்கள்.பாசம் பரிவு நேசம் என்ற புரிதல் இல்லாத சலனமற்ற மனிதர் என்ற மனிதராய் வாழ்வார்கள்.ஆனால் கிராமம் இதற்கு நேர்மாறாய் இருக்கும்.கிராமத்தின் பரப்பும் கூட்டமும் குறுகி இருக்கும்.ஆனால் மனது விசாலமாய் இருக்கும்.ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் ஒரு குடும்ப உணர்வாய் ஒரே பந்தமாய் பழகியும் உதவியும் புரிதலோடு வாழ்வார்கள்.எந்தப்பக்கம் நியாயம் இருக்குமோ அந்தப்பக்கம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து நிற்பார்கள்.அதாவது அந்தக்கிராமம் ஒரு குட்டி சாம்ராஜ்யம் என்றும் கூறலாம்.அந்தக்கிராமத்தில் என்ன பிரச்சனைகள் நிகழ்ந்தாலும் அவ்வளவு எளிதில் காவல் நிலையம்வரை போகாது.அந்த அளவிற்கு கிராமத்தினர் பஞ்சாயத்துத் தலைவருக்கு மதிப்பும் அளித்து வந்தனர்.

ராஜாவும் ஒரு நல்ல பையன்.எந்த வம்பு தும்புக்கும் தலையிடமாட்டான்.தன் கல்வியில் மட்டுமே கவனமாக இருப்பான்.அதனால் கிராமத்தார் அவன் மீது ஒரு அலாதி அன்பு வைத்திருந்தனர்.அவனுடைய அம்மாவும் ஊரோடு ஒன்றி வாழ்ந்து வந்தாள்.அந்த ஊரில் யார் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முதல் ஆளாய் சென்று இறுதிவரை எல்லாப் பணிகளையும் உதவியாகச்செய்வாள்.ஆகவே அவளைப்பற்றி யார் என்ன சொன்னாலும் ஊர் நம்பாது.

அப்படித்தான் அன்றும் ஊர் அவள் பக்கம் நின்றது.அன்று அந்தகிழவியின் அபாண்டமான பேச்சு அவளை மட்டுமல்ல ஊரையே காயப்படுத்திவிட்டது.இளம் வயதில் விதவையானாலும் தன் மகனுக்காக தன் சுய சுக துக்கங்களை எண்ணாது தன் மகனின் எதிர் காலமே லட்சியம் எனக் கொண்டு ஒரு சத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.அதனால் அந்த ஊர் அவளுக்கு பக்க பலமாக இருந்தது.

கமாலாவின் ஆச்சியை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துணையாக கிராமத்துத் தலைவரும் உடன் சென்றார்.(தொடரும்)
===============================================/////////////////////////////////////////////////////////////////////////////////////////////==================================================


குறிப்பு:இனி அடுத்தடுத்தும் வரும் தொடர்கள் ஒருநாள் விட்டு மறுநாள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.என்பதை நேயர்களின் கவனத்திற்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த தொடர்:4/2/2014 .

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (2-Feb-14, 8:39 pm)
பார்வை : 165

மேலே