வானம் மண்ணோடு உறவாடும் மொழி
பனையோலை தமிழே-நீ
பனைவெல்லமாய் இனித்தாய்
பாவம் என்செய்வது-
பச்சிளங்குழந்தை உன்னை -கறையான்
புசித்து பெருத்தது
தங்கமனம் உருக்குலையா தமிழர்
தன்மானம் நீயெனக் கருதி
தங்கத்தால் தகடெழுதி
எங்களுக்காய் சேர்த்துவைத்தார்
எங்கிருந்தோ வந்தவனும்
எங்கிவிட்டான் உன்னழகினிலே
தூக்கிச் சென்றான் தோள்மீது
தொல்லுலகின் திசையெட்டும்...
நெஞ்சத்து காதலது
நீங்காது நிற்பதுபோல்
நீடூழி நீவாழென
நிலப்பாறை மீதினில்-ஓவியமாய்
நிலைக்கச் செய்தார்
வெரும்பாறை உன்னால்
வெண்ணிலாவாக தோன்ற
ஆழ்கடல் அலைபாய்ந்தது
அணைத்து இழுத்தது...
முதற்சங்கம் நீகடல் மறைந்தாய்
முச்சங்கமாய் மும்முறை எழுந்தாய்
மூவேந்தரும் மறைந்த பின்னும்-கடல்
முத்தாய் தினம்கரை காண்கிறாய்...
எறும்பூர கல்லும் தேயும்
யுகந்தோறும் உயிர்கள் மாயும்-
நீயோ
யுகங்கள் தாண்டியும்
இளமை காக்கிறாய்
மேகவலை விரித்து
மோகனமாய் சிரித்து
புலப்படா தூண்மீது
புவிக்கூரையாய் நிற்கும்
வானம் மண்ணோடு
உறவாடும் மொழி நீதானோ....!