புருவ மீசை வினோதன்

கப்பிச் சாலையோரம்
காலாற நடந்தபின்
கண்ணோடு வந்தது
கைக்கெட்டும் தூரத்தில்
காப்பிக் கடை !

கடைக்குடையின் கீழ்
அமர்ந்திருந்த நாற்காலியில்
புத்தகங்கள் புதைத்துவிட்டு
எதேச்சையாய் பார்த்துவிட்டேன்,
காந்த விழியொன்று
காப்பிக்கு காத்திருப்பதை !

வாங்கிவிட்டு நகர்ந்தாள்
என்னையும் கண்ணோடு
இழுத்தபடி - வேறேதும்
வழியின்றி - எதிரெதிரே !

சர்க்கரை கரைக்கத்தந்த
நீள உறிஞ்சிக் குச்சியில்
கலக்கினாள் காப்பியை
கலங்கினேன் நான் ! ஏன் ?

கண்களெனும் காந்த
உருண்டைகளை - என்
கண்ணோரம் உருட்டிவிட்டு
என் கண்ணை விரட்டி
விளையாடுகிறாள் !

உதடு சுருக்கி உறிஞ்சும்
பொழுதுகளில் - சரிவிகித
கலவைகளின் - என்னையும்
குடிக்கிறாள் - கண்களை
உறிஞ்சியாய் உருமாற்றி !

ஆணென்ற போதும்
எதிர்நோக்கி - எதிர்வினை
நோக்க பயந்து - வேறெங்கோ
வெறிக்க பார்த்த என்னை,
விரும்பி பார்த்தபடி நகர்கிறாள் !

கண்மை இலும்பிய கண்கள்
உண்ட குழந்தையின்
வாயாக மாறா - அக்குமரியின்
புருவம் - மீசையாக தோன்றியது !
ஆம், கண்ணனை உண்ட வழி
கருவிழியெனில் - புருவங்கள்
மீசை தானே !? - என் விழிப்பேச்சு
அவளுக்கு புரியும்தானே ?

(ஒரு பொண்ணு டீ குடிச்சுது, அவ்வளவே ! வதந்திகளை பரப்பாதீர், நம்பாதீர் ;) )

எழுதியவர் : வினோதன் (6-Feb-14, 9:07 pm)
பார்வை : 113

மேலே