கலிகால அசுரன்

மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை மீறிய செய்கைகள் உள்ளிட்ட பல தவறுகளை செய்ய வைத்தது, மேலும் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உயிர் நண்பன் உட்பட யார் பேச்சையும் கேட்க விடாமல் தன் வசப்படுத்தியது,நேற்றுவரை தொட்டு உணர்ந்தவர்களை இன்று காற்றோடு காற்றக்கியது,நினைவை மட்டும் எண்ணி,எண்ணி,வருந்த செய்தது,இயற்க்கை விதிகளுக்கு புறம்பாக மனித குலத்தின் விதியை தீர்மானிக்க வந்த நான்காம் உலக போரே! செல்வந்தர்களையும் பரம ஏழையாக்கும் திறன் பெற்ற மதுவே! தாலிப்பொன்வரை விட்டு வைக்காமல் மதுவிற்காக அடகு வைத்து அமிர்தம் போல் உட்கொள்ள வைத்து, சுவாசிக்கும் காற்றைப்போல் இயல்பான குண வடிவில் போதையை அன்றாட பழக்கமாக்கி,நிகழ்காலத்தை கூட இறந்த காலமாக்கும் வல்லமை படைத்து பல உயிர்களை பலிவாங்கிகொண்டிருக்கும் மது வடிவில் ஆட்டிபடைக்கும் செயற்கை சுனாமியே! ஒற்றுமையை சீர்குலைத்து, கலகத்தை உண்டாக்கி வரும் கழிவுநீர் மதுவே! சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்ல வைத்து மக்களை கிளிப்பிளைகளாய் அடிமை சாசனம் எழுத வைத்து நிரந்தர அடிமைகளாய் ஆக்கிய கலி கால சூரனே! சாத்தான் ஓதும் வேதத்தை தாரக மந்திரமாக்கி உலகை அழிக்க புறப்பட்ட பஞ்ச பூத நீர்வடிவ அணுவே! உயிர்கள் இல்லா கிரகத்தில் மட்டுமே வசிக்க முழு தகுதிபெற்ற வேற்று கிரக வாசியே! அரசனையும் ஆண்டியாக்கும் குட்டிசாத்தான் வடிவில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வசியம் செய்யும் சூனியக்கார மதுவே! சாகா வரம் பெற்றவன் போல் உலகை ஆளநினைக்கும் எமனே! உன்னை வதம் செய்யும் நாள் என்றோ! மனித பிறவியின் இயல்பான நற்பண்பை கெடுத்து, மதுவின் போதை எனும் அம்பை ஏவி சந்தேகம் எனும் பெயரில் பல பெண்களின் வாழ்கையை கேள்விக்குறியாக்கி, அப்பெண்களின், உயிரை கானல் நீர் ஆக்கி வரும் செயற்கை சீற்றமே! பெண்கள் கண்ணீரே உன்னை விரைவில் சாம்பலாக்கும்,பெண்களின் சாபமே உனக்கு மரண தண்டனையை கொடுக்கும்.
சீக்கிரமே உன் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி அல்ல, உன்னால் உயிர் நீத்த என் மக்களின் ஆத்மா சாந்தியடைய மகிழ்ச்சி அஞ்சலி செலுத்தும் நாள் கண்ணுக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளது...
மிக விரைவில் மது வடிவிலான கலிகால சூரனை வதம் செய்து,,,முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது எனும் கூற்றை போல் நாம் அனைவரும் முயலாமையை கைவிட்டு முயலும் ஆமையாக உருவெடுத்து, வெள்ளாமையை பெருக்கி, இல்லாமையை ஒழிக்க சத்தியம் பாடுபடுவோம். சாகா வரம் பெற்றவன் போல் நாட்டாமை செய்து கொண்டிருக்கும் மது வடிவில் வந்திருக்கும் கலி கால சூரனை நாட்டை விட்டு அறவே ஒழிப்போம், பிறகு முடிந்தால் உலகை விட்டே ஒழிக்க ஒன்று பட்டு முயற்சி செய்வோம்! நம் எதிர்கால சந்ததியினரை அன்புள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் மாற்றி நம் இந்தியாவை வல்லரசாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
வாழ்க வையகம், வளர்க ஜனநாயகம்,
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
கஜேந்திரன் சிட்லபாக்கம்

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன (11-Feb-14, 8:43 pm)
பார்வை : 121

மேலே