கற்பனையே கைத்துணையே

கற்பனையே! கைத்துணையே!
நீமட்டும் இல்லையென்றால்
நான்என்றோ முடிந்திருப்பேன்---
நடப்போடு நடைபோட்டு
நலிந்தே ஒழிந்திருப்பேன்---

துயரத்தின் தொட்டிலிலே
துவண்டு தவித்துத்
துடிதுடிக் கிடந்து
தளிர்கெடத் தீர்ந்திருப்பேன்--

ஈடேறும் வழிதனை
எங்குமே காணாமல்
காடேறி மலையேறிக்
காற்றோடு கலந்திருப்பேன்----

நீவந்ததால் உவக்கிறேன்---
நிலத்தினில் நிற்கிறேன்---
நாள்தோறும் இன்பம்கண்டு
நலத்தோடு இருக்கின்றேன்---

வள்ளுவர்க்கு அருகமர்ந்து
உள்ளம் நிறைந்திடவே
உரையாடி வியக்கின்றேன்---
உறவாடி உயர்கின்றேன்---

நெஞ்சத்துப் புன்செயில்
நெருஞ்சிகளே இருந்தாலும்,
அஞ்சியே நடுங்காது
பஞ்சாக்கிப் படுக்கிறேன்---

வற்றிய ஆற்றிலும்
வருநீர் கண்டுவந்து
மூழ்கிக் குளித்து
முத்தும் எடுக்கின்றேன்---

கதிரோடு சதிராடிக்
களிப்போடு விளையாடிக்
கடலோடு கலந்தாடிக்
குளிப்போடு எழுகின்றேன்---

ஆழ்கடலில் மூழ்கியும்
மீன்களோடு நீந்துகிறேன்--
பேரழகுப் பவளப்பாறையில்
நீள்துயில் கொள்கின்றேன்---

மேகக் கூட்டத்தின்
மேலேறிப் பயணித்துத்
தாகத்தைத் தீர்த்துவிட்டுச்
சோகத்தை மாற்றுகிறேன்---

பூவிதழ்ப் படுக்கையில்
தாவிச்சென்று அமர்ந்து
தேன்எடுத்துச் சுவைத்து
நான்மயங்கி உறங்குகிறேன்---

தென்றலின் அரவணைப்பில்
தவழ்ந்துவரும் பூமணத்தில்
தென்னை இளங்கீற்றினில்
திக்கெட்டும் சுற்றுகிறேன்---

கூடுகட்டும் ஈக்களோடு
கூடவே குடியிருந்து
தேனெடுக்கும் வித்தைதனைத்
தெளிவாகப் பயில்கின்றேன்---

சிங்கத்தின் கண்களில்
சிவப்பேறும் வேளையிலும்
சிரித்து மகிழ்ந்தாடி
சீற்றத்தைக் குறைக்கின்றேன்--

காணாத பொருளையெலாம்
கண்முன்னே கொண்டுவந்து
கலையழகின் நுணுக்கத்தைக்
கண்டுசுவை கொள்ளுகிறேன்---

தித்திக்கும் தமிழ்வளர்த்துத்
திக்கெட்டும் திரிந்துபல
முத்தெடுக்கும் மேலோருடன்
மூழ்கியே போகிறேன்

குயிலுக்குக் கவிதையைக்
குரல்சிறக்கக் கற்பித்துக்
கச்சேரிபல நடத்திக்
கண்மூடிக் களிக்கின்றேன்---

துக்கத்தின் பாதையிலும்
தூக்கத்தை நான்கொண்டு
மிக்கபேர் மகிழ்வோடு
மீதூர்ந்து ஆர்க்கின்றேன்---

நனைக்கும் பனித்துளியின்
நடுவினில் வீடுகட்டி
நனைந்த சுகத்தினில்
நிலையாகி நனைகின்றேன்---

கற்பனையைக் கைதுசெய்து
கவிச்சிறையில் அடைத்துக்
கற்பனையின் பொற்புகளைக்
கண்டுகண்டு களிக்கின்றேன்---

குழந்தையோடு குழைந்தாடி
மழலையோடு மழலைபேசிப்
பிஞ்சுவிரல் பஞ்சில்படுத்து
நெஞ்சுமகிழ்ந்து நெகிழ்கிறேன்---

விண்முட்டும் மாளிகையில்
பண்கொட்டும் யாழிசையில்
வெண்பட்டுப் பூவணையில்
கண்பட்டுக் கிடக்கின்றேன்---

கற்பனையே! கைத்துணையே!
காரிருளில் கைவிளக்கே!
அற்புதமே! அற்பனுக்கும்
பொற்பதமே-! நீவாழ்கவே-!
+++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : பேராசிரியர் (13-Feb-14, 3:42 pm)
பார்வை : 70

மேலே