ஆமென்றால்
காதலியே நில்!
வினாக்கள் சிலவுண்டு
விடை தந்து செல்
இப்போதும்
காலையில் மலரும்
பூக்களைப் போல
என்னைக் கண்டதும்
மலர்கிறதா உன் முகம்?
என் குரல்
உன் செவியை அடைந்ததும்
சூழ்நிலை மறந்து - உன்னால்
சுகம் காண முடிகிறதா?
என் குறுந்தகவல்களை
உன் கைபேசி தந்ததும்
படிக்கும் போதே
பறக்கிறதா மனசு?
என் புகைப்படங்களை
பார்க்கும் போது
கண்களால்
புன்னகைக்க முடிகிறதா
உன்னால்?
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
முத்தம் கொடுக்கிறாயா?
என் பரிசுப் பொருட்களை
பார்க்கும்
ஒவ்வொரு தடவையும்
புதிய பொருட்களை பார்க்கும்
ஆர்வம் பிறக்கிறதா?
பிறர் கண்ணில்
படாமல்
உன் மடிக்கனணியில்
என் புகைப்படத்தை
சுவர்த்தாளிலிட்டு
மகிழ்ந்திருக்கிறாயா?
'நான் வெறும் ஜடம்
அவன்தான் எனதுயிர்' என
அழுத்தமாக நம்புகிறதா
உள்மனது?
'என்
புன்னகைக்கும்,கண்ணீருக்கும்
நீதான் பொறுப்பு' என
என்னிடம் சொல்ல
எத்தனிக்கிறாயா?
இமைகளை
மூடும் போதும்,
கண்மணி
மலரும் போதும்
என் முகமே தெரிகிறதா
எதிரில்?
என் குரலை
கேட்காத நாட்களில்
ஸ்தம்பித்துப் போகிறதா
உன் உலகம்?
நேரம் குறித்து
காவலிருக்கிறாயா
என்னையோ
என் அழைப்பையோ
எதிர்பார்த்து?
வந்ததும் மலர்ந்தது.
வராததும் வாடியும்
போகிறாயா?
என்
புன்னகையொலி கேட்டு
உன்
பெண்மை
கலவரப்படுகிறதா?
நீராடும் போதும் - என்
நினைவு வருகிறதா?
என்னை தவறாக
புரிந்து கொண்டதற்காக
உன்னை எப்போதாவது
தண்டித்திருக்கிறாயா?
நீ என்னை
புரிந்து கொள்ளவில்லையென
நான் சொன்னதும்
கோபம் வருகிறதா உனக்கு
என் மேல்?
வலியுறும் போதும் - உடல்
நலிவுறும் போதும்
என்னோடு பேசினால்
ஆறுதலாயிருக்குமென
எப்போதாவது
நினைத்ததுண்டா நீ?
என்னிடம்
ஒரு பொய் சொன்னதற்காக
அதையெண்ணி
ஓராயிரம் தடவைகள்
கலங்கியிருக்கிறாயா சொல்?
நினைக்கும் போது
கண்ணுக்குள்ளும்
காணும் போது
நெஞ்சுக்குள்ளும்
ஒட்டிக் கொள்கிறாயா
என்னை?
இருந்துவிட்டேனும்
என் அங்கவாசம்
வந்து போகிறதா
உன் நாசியினோரம்?
கவிதையை விடு!
ஒருவரியேனும்
உயிர் உருகும்படியாய்
எழுத முடிகிறதா
எமைப் பற்றி?
இத்தனைக்கும்
ஆமென்று சொல்வாயானால்
நீயும் காதலிக்கிறாய்
இப்போதும்
என்னை.