ஓர் எழுத்தாளனின் கதை
தொடர்கதை : இரா.சந்தோஷ் குமார்
----------------------------------------------------------------------------
சூரியன் தன்னை உதயமாக்க ஆயுத்தமாக்கி கொண்டிருக்கும் பனிபெய்யும் அதிகாலை பொழுது. அப்போது சிதம்பரம் மேலவீதியிலுள்ள அந்த மருத்துவமனை பிரசவ அறையில் ஒரு தாயின் கர்ப்பப்பையிலிருந்து இந்த விசித்திர உலகை காண வெளிவர முயற்சித்து கொண்டிருக்கிறது ஒரு குழந்தை..!
சூரியன் மெல்ல மெல்ல பனி படர்ந்த இரவினை கிழித்துக்கொண்டு பிரசவிக்கிறது.
பிரசவ அறையில் ஒரு புதிய கீதம் ஒலிக்கிறது.
சூரியனின் ஒளிகதிர்கள் பிரகாசமாக வெளிச்சமடைய
மருத்துவமனையில் “ சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது “ அந்த குழந்தையின் தகப்பானரிடம் செவிலியர் பெண் சொல்ல அவரின் முகம் சூரியனையும் மிஞ்சிடும் அளவில் பிரகாசமடைகிறது. அந்த சந்தோஷத்தில் அந்த செவலியர் பெண்ணிற்கு தன் கழுத்தில் மாட்டியிருக்கும் தங்க செயினை நன்றியுணர்வுடன் தந்துவிட்டு தான் தகப்பன் ஆன ஆனந்தத்தை உடல் மொழி மூலம் அறிவிக்கிறார்.
அன்பான மனைவியின் தலையை ஆசையுடன் வருடி “ நம்ம குழந்தை எவ்வளவோ அழகா இருக்குஇல்ல.. உன்னைப்போலவே” என்று அவர் சொல்ல
”போங்க எப்பவும் நீங்க இப்படித்தான் என்னையே சொல்வீங்க .இவன் உங்களைப்போல கம்பீரமா இருக்கான் பாருங்க “ செல்லமாக இவள் சொல்ல ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கிறது அவர்களின் வாழ்வில்..
பாசமான பெற்றோர்களின் செல்லமகனாக வளர்ந்த தினகரன்,
தன் பள்ளி பருவத்திலிருந்தே ஆங்கில வழி கல்வி பயின்று வந்தான். தாய்மொழி தமிழ் என்பதாலும் அவனின் தந்தை தமிழ் ஆர்வலர் என்பதாலும் தாய்மொழி தமிழை அவன் நேசிக்க தவறவில்லை.. ”பிழைப்புக்கு பிறமொழி, உணர்வுக்கு தாய் மொழி ”என்ற வகையில் தான் அவனின் நாகரீக வாழ்க்கை சென்றது.
பள்ளி பருவத்தின் இறுதி ஆண்டு..!
அவன் படித்த பள்ளியில் ஒர் இலக்கிய விழா. அதில் பிரபல திரைப்பாடலாசிரியர் முத்துமாணிக்கம்
கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த பிரபலத்தின் நாவில் உச்சரித்த அழுத்தமான நயமான தமிழ் வார்த்தைகளால் தினகரன் தன் தமிழ் ரசிப்புத்தன்மையை உணர்ந்தான். அந்த பிரபலம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் மெய்மறந்து உருகினான்.
சிறப்புரையை முடித்துக்கொண்டு அந்த பிரபல திரைப்பாடலாசிரியர் முத்துமாணிக்கம் தன் காரில் ஏறும் சமயம்…
”எஸ்கியூஸ் மீ சார்.. ஆட்டோகிராப் ப்ளீஸ் “ தினகரன் தன் கையை நீட்டி கேட்க,
புன்னகைத்த முத்துமாணிக்கம் “ எப்படி கண்ணா உன் கையில் கையெழுத்து போடுவது, ஏதாவது பேப்பர் இருக்கா? அதுல போடுறேன்.”
”சார் இல்ல சார்.. நான் பேப்பர் எடுக்கப்போறதுக்குள்ள நீங்க போயிடுவீங்க .. ப்ளீஸ் ப்ளீஸ் மிஸ் திட்டுவதற்குள்ள சைன் போடுங்க சார் “ ஒரு விதமான பதற்றத்தில் தினகரன் கெஞ்சிட,
முத்து மாணிக்கம் “ சரிடா கண்ணா, என்கிட்ட என்ன பிடிக்கும்..? என்னைப்பற்றி உனக்கு என்ன என்ன தெரியும்? “ என்று கேட்டுக்கொண்டே தினகரன் கையில் தன் கையெழுத்தை போடுகிறார்.
--இந்த உலகிலுள்ள மொத்த பனித்துளிகளும் அவன் மூளைக்குள் புகுந்த புதுமை--யை உணர்ந்த தினகரன்
“ சார்.. நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்க.. அப்பா சொல்லி இருக்கிறார்.. அப்புறம்..அப்புறம் ஹாங்ங் நீங்க பேசினா நாள் பூரா கேட்கலாம்ன்னு அப்பா சொல்லி இருக்கிறார்… இன்னும் நிறைய சொல்லுவார் சார்.. பட் உங்கள இப்போதுதான் பார்க்கிறேன்.. நீங்க மேடைல பேசியது ரொம்ப நல்லா இருந்திச்சு . கொஞ்சம் புரிஞ்சது நிறைய புரியல சார் ஆனா என்னமோ பிடிச்சிருக்கு என்னன்னு தெரியல .. “
பலமாக சிரித்த முத்துமாணிக்கம்… “ ம்ம் இந்த கையில் இருக்கிற ஆட்டோகிராப் அழிஞ்சிடும்மே..கண்ணா..! என்ன செய்வ…..? இரு என் கைக்குட்டையில கையெழுத்து போட்டு தரேன்..”
”ஹய்ய்யா… ரொம்ப தேங்கஸ் சார்.. இத அப்பாகிட்ட காட்டபோறேன்… அப்பாக்கு நீங்கன்ன ரொம்ப இஷ்டம்…” தினகரன் ஏதோ சாதித்து விட்ட பரமதிருப்தியில் வீட்டிற்கு சென்று அவன் தந்தையிடம் காட்டி பெருமிதம் கொண்டான், அவரும் தன் மகனை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்து, “ நீயும் அவரைப்போல தமிழ் உச்சரிக்கணும், தமிழ் உன் மூச்சா இருக்கணும் சரியா ? “
”ம்ம்ம்ம்ம்ம்ம் ”என்று பலமாக தலையை ஆட்டினான்.
தமிழ் உச்சரிப்பு என்பது ஒரு அற்புதகலை.
லகர ,ளகர,ழகர உச்சரிப்பில் நம் நாக்கு, நம் வாய் கூண்டுக்குள் நடனமாடிடும். இந்த உலகிலே இருக்கும் மனிதர்களில் தமிழனின் நாக்கு தான் தலைச்சிறந்தது.
==பல்லில் முத்தமிட்டு
==பள்ளத்தில் முட்டிவிட்டு
==பழத்தில் சுவைக்கொடுக்கும்
தினகரன் சரியாக தமிழை உச்சரிப்பானா ? என்ற கேள்விக்குறிக்கு அடுத்த நாள் முற்றுப்புள்ளி வைத்தது அந்த சம்பவம்.
அடுத்த நாள்…!
பள்ளிக்கு செல்லும் போது, அவன் எதிரே வந்த அந்த மஞ்சள் வாகனம், இவன் மீது மோதும் சில நொடிகளுக்கு முன்…. பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது. பயத்தில் தினகரன் மயங்கி விழ, அருகிலிருந்தவர்கள் அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். தகவல் தெரிந்த தினகரனின் பெற்றோர் அலறி சிதறி மருத்துவமனைக்கு வந்தார்கள்
“டாக்டர் ! இப்போ எப்படி இருக்கு “ தினகரனின் தந்தை
”நத்திங் டூ வொரி சார். நல்லா பயந்துட்டான் போல , அதான் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து மயங்கிட்டான். பயம் தெளிய ரெண்டு நாள் ஆகலாம். பட் அதிர்ச்சியில அவனுக்கு ப்ரெயின்ல சம்திங் ப்ராப்ளம் ஆகிடுச்சு. சோ திக்கி திக்கித்தான் பேசுவான். கொஞ்ச நாள்ல அவனே பிராக்டீஸ் பண்ணினா நார்மல் ஸ்டேஜ்க்கு வந்திடுவான். அண்ட் முக்கியமா உங்க பையனுக்கு ஏற்கனவே வேற ப்ராப்ளமும் இருக்குன்னு ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது … ம்ம் சைக்காலாஜி டிரீட்மெண்ட் கைக்கொடுக்கலாம். அது எந்த அளவுக்கு ப்ரோயஜெனம் படும்ன்னு தெரியாது. ரொம்ப அதிகமா அவனை யோசிக்க வைக்க வேண்டாம்.. “
”டாக்டர் என்ன சொல்றீங்க… படிக்கிற பையன் டாக்டர்… வேற எதாவது டிரீட்மெண்ட் செஞ்சாவது..”
குறுக்கிட்ட டாக்டர் “ புரியுது சார்..! கொஞ்சநாள் தான்.. டோண்ட் வொரி சார்..” ஆறுதலாக சொல்லி தினகரனின் தந்தைக்கு தைரியம் கொடுக்கிறார்.
“ டாக்டர் அந்த பையனுக்கு என்ன ப்ராப்ளம் ?. ஆசிஸ்டெண்ட் கூட ஆகலையே.. ? “ நர்ஸ் டாக்டரிடம் வினாவுகிறாள்.
“அந்த பையன் பிறக்கும்போதே மூளை தண்டுவடம் பாதிச்சு இருக்கு.., சோ அதிக ஆர்வம், அதிக உணர்ச்சி, டென்ஷன், பயம் இதுனால அவனுக்கு மூளை அப்போ அப்போ தற்காலிகமாக முடங்கிவிடும் வாய்ப்பு இருக்கு, ஓவரா திங்கிங் பண்ணினா அவன் உயிருக்கு எந்த வயதிலும் கூட ஆபத்து வரலாம். ,, பார்ப்போம் மெடிக்கல் மிராக்கிள்ன்னு ஒன்னு இருக்கு… கடவுள் அந்த பையனை காப்பாற்றுவார்…” என்று டாக்டர் தினகரகனின் வாழ்க்கையை கடவுளிடம் ஓப்படைத்து கைவிரித்து மேலே காட்டுகிறார்.
(தொடரும்….)