வேட்டையாடி வந்திருக்கிறேன் மீள் வினோதன்

கலங்கிய கண்ணீரும்
வழியும் குருதியும்
கொட்டும் வியர்வையும்
விலையாய் கொடுத்துவிட்டு
வெற்றி வாங்கி
சமைத்து - செரித்துக்
கொண்டிருக்கிறேன் !

வலிகளுக்கு - வால்
முளைத்து - என்
உடல் தோறும்
தாவி விளையாடும்
வேலைகளிலும் - தட்டிவிட
தோன்றாமல் - தவழ
விட்டபடி தவமிருந்தேன் !

இன்னல்களும்
இடையூறுகளும்
பாம்பாக காலைச் சுற்ற,
ஊற்றுகள் வெட்டினேன் !
பொறுமைகள் ஊற - எதிரிகளுக்கு
பொறாமைகள் ஊற !

எனைக் கடந்த வானமதில்
வானவில்களோ
வண்ண மீன்களோ
வந்தது கிடையாது !
வறண்ட பூமியின்
வயிற்றில் - வர்ணங்கள்
இருக்காது தானே ?

இரத்தம் வற்றும்
இரசாயன மாற்றம்
நடக்கும் போதிலும் - நான்
ஓடிக்கொண்டே இருந்தேன் !
அவ்வப்போது
இடறுபவை - நொடி முள்ளின்
நெடிய கால்களே !

வலிகளை திருப்பிவிட
வழிகள் ஏதுமில்லை !
வழிகளை கண்டு திரும்பிவிட
விழிகளில் வீரியமில்லை !
செரிக்கமுடியாதது எனினும்
தின்று தொலைத்தேன் !
நானோ, அதுவோ
சாகட்டும்"மென்று" !

என் உழைப்புகள்
உறிஞ்சியபின்
உச்சி முகர்ந்து - முத்தம் தர
வேண்டாம் வெற்றியே !
தோல்வியின் உதடுகளை
என்முன் தொங்கவிடாதே !
என்னையுன் உதட்டுக்காய்
ஏங்க விடாதே !

வெற்றியொன்றை
வேட்டையாடி வந்திருக்கிறேன் !
வலிகளின் தடங்களை
கோபங்களாக கொட்ட
தளம் கொடுத்த - இணைய
தளத்திற்கு நன்றி !
எழுத இடம் கொடுத்த
எழுத்துக்கும் - எழுத எழுத
எழுந்துபோய் இடம்பார்த்து
அமர்ந்த எழுத்துக்கும் !
நன்றிகள் ! நன்றிகள் !

எழுதியவர் : வினோதன் (22-Feb-14, 6:59 pm)
பார்வை : 70

மேலே