அடையாளம் தெரியாத மிருகங்கள்

எங்கிருந்தோ
அவள் அழைக்கின்றாள்
என் செவிகளுக்குக் கேட்கின்றது..!!

அவள்
புன்னகைகள் எல்லாம்
உதிர்ந்து கிடக்கின்றன
என் பாதத்தில்
அதன் காயங்களின்
ஈரத்தை நான் உணர்கின்றேன்..!!

அவளது
நடுக்கம் நிறைந்த
அச்சத்தின் உச்சங்களை
சுமக்க முடியாமல்
உடைந்து நிற்கின்றாள்..

உயிர் உடையும்
பெருநொடிபோல்
ஒருநொடி
உணர்கின்றேன் என்னுள் நான்..!!

நெஞ்சம்
குமுறுகின்றாள்
கூக்குரல் இடுகின்றாள்
அழுகின்றாள்
கண்ணீரிலும் கொஞ்சம்
உதிரம் வடிய கதறுகின்றாள்..!!

காட்டேரியாக
இருந்திருந்தால் கூட
போராடாமல்
உடல் கொடுத்திருப்பாள்
உதிரம் தானே
எடுத்துக்கொள்ளட்டும் என்று..!!

காம மதம் பிடித்த
மனிதப் பேய்களிடம்
மாட்டிக் கொண்டவள்
கடைசி வரை போராடுகின்றாள்..!!

துளித் துளியாக
விழுகின்றது அமிலம்
அவள் விழிகள் துவங்கி
உயிரின் ஆழம் வரை..!!

கோடிக் குத்தூசிகளின் மேல்
விழுந்து கிடக்கின்றாள்
உயிர்
அணு அணுவாக
கிழிக்கப் படுகின்றது..!!
மனம்
சிதல் சிதலக
வெட்டி உடைக்கப் படுகின்றது..!!

பெரும் கனவுகளுடன்
தொட்டிலில்
உறங்கிக் கிடக்கும்
பச்சிளங் குழந்தையை
யாரும் அறியா நேரம் பார்த்து
சுற்றித் திரியும் வெறி நாய்கள்
கவ்வி எடுத்து
குப்பைத் தொட்டியில் இட்டு
அவசர அவசரமாக
குதறித் தின்கின்றன..!!

அத்தனை கொடூர இச்சைகள்
கொண்டது என்ன மிருகமோ..!!

அதன் கொடூரங்களுக்கு
ஆளானவள்
நிலைதான் துன்பங்களின் உச்சமோ..!!

அந்த சின்னஞ்சிறு
குழந்தை நெஞ்சத்தின்
தொண்டை அறுபட்ட கதறல்கள்
எனக்கு இன்னமும் கேட்கின்றது..!!

என்
தங்கை ஒருத்தி
எங்கோ
உயிர் உள்ள பிணமாக கிடக்கின்றாள்..!!

அவளது
மரண ஓலம்
என் மூளையை
இன்றும் குடைகின்றது..!!

இந்த நொடி
நான் இதனை
எழுதிக் கொண்டிருக்கும் நொடி
நீங்கள் இதனை
படித்துக் கொண்டிருக்கும் நொடி

இந்த உலகினில்
ஏதோ ஒரு மூலையினில்
அவளைப்போல்
ஒரு சகோதரி
மரண ஓலம் இட்டுக் கொண்டிருக்கின்றாள்..!!

அடையாளம் தெரியாத
மிருகங்களும்
வசிக்கும் உலகம் இது..!!

எது அந்த மிருகமென
எப்படி கண்டுகொள்வாளோ.. என் சகோதரி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (28-Feb-14, 12:48 pm)
பார்வை : 2193

மேலே