சகுனம்

"வாங்க வாங்க... வீட்டிற்கு வந்த புரோக்கர் வேதாசலத்தை வரவேற்று நாற்காலியை எடுத்துப் போட்டார் மரகதம்"

மரகதம்மா நீங்க கேட்ட மாதிரியே உங்க பொண்ணு கஸ்தூரிக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்.
பையன் வீட்டுக்கு ஒரே பிள்ளை
கவர்மெண்ட் உத்யோகம் பார்க்கிறார் ்
ஓரளவு வசதியான குடும்பம்

"நம்ம கஸ்தூரி போட்டோ பார்த்துட்டு அவங்க பொண்ணு பார்க்க எப்போ போகலாம் என்று நச்சரிக்கிறாங்க"

சந்தோஷம்....ஆனா பெண் பார்க்க வர அவசரப்பட வேண்டாம் . நான் மாப்பிள்ளை ஜாதகத்தை பார்க்கணும்
பொண்ணு மாப்பிள்ளைக்கு பொருத்தம் இருந்தா அவங்களை பெண் பார்க்க அழைப்போம் என்றார் மரகதம்.

நீங்க சொல்றதும் சரிதான். நீங்க இந்த வாரத்திலே ஒரு நாள் ஜாதகம் பார்த்துட்டு எனக்கு சொல்லுங்க.
விடை பெற்றார் தரகர்.

மரகதத்தின் ஒரே மகள் கஸ்தூரி.
எம் எஸ் சி, எம்பில் படித்தவள் கஸ்தூரி.
கஸ்தூரி பத்தாம் வகுப்பு படிக்கும் போதே புற்று நோய்க்கு தந்தையை பறி கொடுத்தவள். தாயின் அரவனைப்பில் தடம் மாறாமல் வளர்ந்து நிற்கிறாள்

" அம்மாடி கஸ்தூரி இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு நான் நம்ம ஜோதிடர் ஏகாம்பரத்தை போய் பார்த்துட்டு வர்ரேன்.
பூஜை அறையில் இருக்கிற அந்த மஞ்சள் பையை எடுத்துகிட்டு வாம்மா..."

தாயின் குரலுக்கு செவி மடுத்து மஞசள் பை கொடுத்து தாயை வழி அனுப்பினாள் கஸ்தூரி.
" போன சிறிது நேரத்திலே திரும்பி வந்தார் மரகதம்"

என்னம்மா ... ஏதாவது மறந்துட்டீங்களா?
என்ற மகளிடம்
அதெல்லாம் ஒன்றுமில்லம்மா நான் புறப்பட்டு போனேன் எதிரில் விசாலம் வந்தாள் அது தான் திரும்பி வந்துட்டேன் என்றார் மரகதம்

"ஏம்மா விசாலம் பெரியம்மா வந்தா உங்களுக்கென்ன புரியாமல் பார்த்தாள் கஸ்தூரி"

புரியாம பேசாத கஸ்தூரி முதன் முதலில் ஒரு நல்ல காரியத்திற்கு போகும் போது இப்படி அபசகுணமா
விதவையை பார்த்துட்டு போகலாமா?

அது தான் சகுணம் சரி இல்லை என்று திரும்பிட்டேன்..... ஒரு வாய் தண்ணீர் குடிச்சிட்டு கொஞ்சம் பொறுத்து போகலாம் என்று பார்க்கிறேன் என்ற தாயை வியப்புடன் பார்த்தாள் கஸ்தூரி

அம்மா நான் ஒன்று கேட்கட்டுமா?
விசாலம் பெரியம்மா விதவை என்றால் நீங்க மட்டும்....விதவை இல்லையா?
உங்களை பார்த்து இதே போல எத்தனை
பேர் என்னென்ன சொல்லி இருப்பாங்க இல்ல...என்ற கஸ்தூரியின் கேள்வியில்
நிலை குலைந்து போனார் மரகதம்."சுளீர்
என்று வெற்றுடம்பில் யாரோ சாட்டையால் விளாசியது போன்று வலித்தது "

"சாரிம்மா உங்களை கஷ்டப்படுத்த இப்படி சொல்லல. உங்களால் யாரும்
கஷ்டப்பட்டுவிடக் கூடதென்று தான் சொன்னேன்."

விதவை என்பது விரும்பி ஏற்றுக்கொண்ட பட்டம் இல்லம்மா அது விதி வசத்தால் நடக்கும் அபத்தம்.
இதில் எங்கம்மா அபசகுணம் வந்துச்சு என்ற மகளை கண்ணீரோடு அணைத்துக் கொண்டார் மரகதம்.

எழுதியவர் : சித்ரா ராஜ் (1-Mar-14, 11:27 pm)
Tanglish : sakunam
பார்வை : 242

மேலே