தரம் தாழ்வேனென்று நினைத்தாயோ

தலைசிறந்த பொறியியல்
கல்லூரியின் மிகச்சிறந்த
மாணவியாய்த் திகழ்ந்த
நான் வெளியுலகில் கால்
பதித்தபோது உணர்ந்தேன் !

நோக்கும் பார்வைகளில்
விஷமங்களையும் வார்த்தைகளில்
வன்மத்தையும் ஒருசேரக்
கண்டேன் ,தனி ஆளாய் நின்று !

முதல் வளாகத் தேர்விலேயே
முற்றுப் பெற்றது ,என்
வேலைக்கான தேடல் !

பன்னாட்டு நிறுவனங்களைக்
கண்டிராத எனக்கு பகற்கனவு
பலித்ததில் மிகுந்த மகிழ்ச்சியே !

பல வண்ணக் கனவுகளில்
மிதந்தபடி சென்ற என்னைப்
பூத்தூவி வரவேற்றன ,
புதுக் கட்டிடப்படிகள் !

அடுத்த பத்து மாதங்களிலேயே
அதே படிகள் எனை கீழே
உருட்டித் தள்ளும் என
மனதாலும் நினைத்ததில்லை
இந்த மாற்றத்தை !

மென்பொருள் மொழிகள்
அறிந்த எனக்கு
வன்சொற்கள் புரியவில்லை !

என்னை வேலையில்
தக்க வைக்க என்னையே
அடகு வைக்கும்
நிலை வந்தது !

தென் தமிழகத்தின்
பாரம்பரியமிக்க குலப்பெண்
தேனினும் இனியாள் என
நினைத்தனவோ அந்த
விஷத் தேள்கள் !!

அட்டைப் பூச்சியாய்
சிறுகச் சிறுக என்
உதிரம் குடித்தன
அலுவலக வேலைகள் !!

எதிர்த்து நின்றதால்
ஏமாளியானேன் !
அடங்கி போனால்
களங்கப்பட்டு விடுவேனே !!

காரணமின்றி நீக்கப் பட்டேன்
அதை அறிய அவசியமில்லை !
கண்டு கொண்டேன் இது
கள்வெறிக் கயவர்களின்
நயவஞ்சகக் கூடமென்று !!

மெத்தப் படித்த அறிவிலிகள்
பண்பாடு தொலைத்துப்
பரிதவிக்க விட்டனர் ,
வழியற்று நின்றேன் !ஆனால்
திசை மாறவில்லை !!

பெரும்புயலில் சிக்கிய
சிறு படகானேன் !
கரையேற யாரையும்
நம்பவில்லை !நம்பிய
யாவரும் நல்லவருமில்லை !!

என் வாழ்க்கை !
என் முடிவு !!
சுழி கழித்து வெளிவந்தேன் ,
முன் கிட்டச் சுருங்கியிருந்த
வானம் எட்டப் பரந்து
விரிந்திருந்தது தன் மடியில்
எனை ஏந்திக்கொள்ள !!!

எழுதியவர் : கார்த்திகா AK (4-Mar-14, 2:09 pm)
பார்வை : 375

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே