அவர்கள் இன்னும் பத்தினிகள்
மறுபடியும்
முகவரி இல்லாத அந்த வீட்டுக்கு
என்கால்கள் இட்டுச் சென்றன என்னை
எதையும் நானிழக்காமல்
என்னாலனதை கொடுத்து வந்தேன்
என்பார்வையில் அவர்கள்
இன்னும் பத்தினிகள்
தாளங்கள் தப்பியதால்
தப்புத்தாளங்களாகி
தாலி கயிறுகள்
தூக்கு கயிறுகள் ஆகின
வேலிகள் பூந்தோட்டத்தை
கூறு போட்டதால்
பொங்கி எழுந்த பூக்கள்
தாலியை அறுத்தன
அம்சதூளிகா மஞ்சங்கள்
அங்கங்களை விற்றபோது
அழுதது கட்டில் மட்டுமல்ல
அடிவயிற்று பசியும்தான்
பசிமட்டும் இல்லாதிருந்தால்
படிக்கட்டுகள் பாசி படாமல்
வழுக்காமல் இருக்கும்
வந்த உடல்பசியில்
வாட்டும் வயிற்றுப் பசி
விலை பேசப்பட்டது
பத்தினிகள் பரத்தையர்கள் ஆனார்கள்
ஒரு பத்தினி பூமி
பட்டினி பூமி ஆனது
மறுபடியும்
முகவரி இல்லாத அந்த வீட்டுக்கு
என்கால்கள் இட்டுச் சென்றன என்னை
எதையும் நானிழக்காமல்
என்னாலனதை கொடுத்து வந்தேன்
என்பார்வையில் அவர்கள்
இன்னும் பத்தினிகள்
.