வறும வெள்ளாம

பஞ்சத்துக்கு பொறந்த பயபுள்ள
பட்டினிக்கு வாக்கப்பட்ட புள்ள
பச்ச உசுர சுமக்க முடியாம
பட்டுப்போக காத்திருக்கும் புள்ள..!!

வறும வெள்ளாம நடந்ததுல
தவறி வந்து விழுந்தபுள்ள
தண்ணீர பாலுன்னு நெனச்சு
குடிச்சு உசுர காத்தபுள்ள..!!

அப்பன தொலைச்ச புள்ள
ஆத்தா சாக பாத்த புள்ள
அஞ்சு வயசு ஆககுள்ள
அர உசுரு தொலைச்ச புள்ள..!!

கண்ணோரம் உள்ள ஈரம்
காஞ்சு உப்பா நெரஞ்சுருக்க
காணும் தெச எல்லாமும்
கானலயே பாக்கும் புள்ள..!!

விதி விட்டுப் போனதடம்
வெத வெடிச்சு கெடக்குதிங்கு
மதி கெட்ட மனித பாதம்
நசுக்கித்தான் போகுதங்கு..!!

நாடி துடிச்சித்தான் கெடக்குது
நாசி காத்த இழுத்துருக்கு
கையுங் காலும் அசஞ்சுகெடக்கு
கண்ணுமுழி கண்டு கெடக்கு

நா வறண்டு போயிருக்கு
நஞ்சா உசுரு கசந்துருக்கு
கொடலு குத்திக் கெடக்குது
குருதி ஒரஞ்சி போயிருக்கு

நெனப்பெல்லாம் காஞ்சிருச்சு
நெரமெல்லாம் கரஞ்சுபோச்சு
நடுநிசியும் உச்சிவெயிலாச்சு
உச்சி உசிரின் உச்ச சாவாச்சு

ஓட முடியாம ஒடுங்கிக் கெடக்குது
பாட சேராம படுத்து கெடக்குது
பச்சத்தண்ணி நாக்குல படாம
பல நாளு பரிதவிச்சு கெடக்குது

மண்ணெடுத்து தின்னு கெடக்குது
மனசெல்லாம் புண்ணாக கெடக்குது
நெஞ்சுக்கூடு நெருப்பா கெடக்குது
உசுரு அங்கே ஒப்பாரி வைக்குது..!!

எழுதியவர் : வெ கண்ணன் (9-Mar-14, 6:18 pm)
பார்வை : 175

மேலே