குடை பிடித்து அலைகின்றேன்

பொருள் கொண்ட
அசைவென்னும் வினையால்
அரிதாரம்
நான் பூசி வந்தேன்..!!

உயிர் என்ற
நிலை இல்லா நிலையால்
சிலகாலம்
நான் வாழ வந்தேன்..!!

மனம் என்ற
பறக்கின்ற பறவை
அதன் மடிமீது
கனம் கொஞ்சம் கொண்டேன்..!!

வெகுதூரம்
நான் பறந்து சென்றாலும்
விரைவாக
வீடு திரும்புகின்றேன்..!!

உயிரோடும்
உடலோடும் மனதோடும்
பெரும் போராட்டம்
உள்ளுக்குள் கொண்டேன்..!!

குடை பிடித்து
அலைகின்றேன் நானும்
காலன் என்னை
காணாது இருக்க..!!

பெருமழையும்
சூறாவளியும் சூழ
குடை காணாமல்
நான் தவித்து நின்றேன்..!!

தொடுப்பதெல்லாம்
குறி தவறாதிருக்க
எடுக்கின்றேன்
மிகப்பெரும் பயிற்சி..!!

எடுப்பதெல்லாம்
தவறி விழுமென்றால்
ஏன் இந்த
மரபென்னும் முயற்சி..!!

விடை இல்லா
கேள்விகள்தான் எங்கே
விடை தருவோர்
அருகினில் இல்லை என்பேன்..!!

தடை இல்லா
பெரும்பாதை தன்னில்
நான் மட்டும்
என் தடம் பார்த்து நின்றேன்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (11-Mar-14, 12:04 am)
பார்வை : 149

மேலே