தனிமையில் அவள்
காரிருள் மேகம் போல்
நீண்டு படர்ந்திருந்த
கூந்தலில்
அழகாய் செருகி இருந்த
சிவந்த ரோஜாவின்
இதழ்களுக்குள்
இன்னமும் எஞ்சியிருந்த
ஈரம் மின்னியது..
பகலவனும் தீண்ட அஞ்சும்
அவள் தேகம் போல்..
வேலை ஒன்றில்
இணைந்து விட
வேட்கையுடன் ஏறி அமர்ந்தாள்..
வேறோர் உலகம் நோக்கி..
கூட்ட நெரிசலில்
சிக்கி திணறி
நுழைந்த நொடியே
உற்று நோக்கினாள்..
வெறுமனே நால்வர்
அமர்ந்திருந்த
பேருந்தின் நிலை
புகைப்படமாய்
அவள் கண் முன்..
இதற்கா இத்தனை
இடிகளும் பிடிகளும்..
மருகி நின்றாள்
மான் விழியாள்..
ஜன்னலோரம் இருக்கை
ஒன்றில்
இயல்பாய்
சரிந்து கொண்டாள்..
இரவின் பிடியில்
சிக்கி திணறும்
கனவுகளோடு
உறக்கமும்..
உலகம் மறந்து
கண் அயர்ந்தாள்
நிலவொளியில்
நிலா மகள்..
தூக்கத்தில்
கழுத்தருகே
சீண்டி பார்த்த
கரப்பான் பூச்சி..
தட்டி விட்டும்
தேடி வந்தது..
இம்முறை
கால்களுக்கு..
தூக்கியெறிய முயன்று
கண் திறந்து
தொட்டுணர்ந்து
திடுக்கிட்டாள்..
ஊர்ந்தது
கரப்பான்
அல்ல..
அதிலும் கேவலமாய்
ஆறறிவு கொண்ட
காமுகன் ஒருவனின்
விரல்கள்..
பொங்கி எழுந்தாள்
தென்றல்
இன்று
சூறாவளியாய்..
பின் இருக்கையில்
பல்லிளித்து
கண் அடித்தான்..
அரக்கன்..
பொளேரென
விழுந்தது..
பல் இரண்டு
தெறித்தது..
அறைந்தே விட்டாள்
பூ மகள்..
நீதி நிலை நாட்ட
பத்ர காளியாய்..
அஷ்ட கோணலில்
திரும்பியது..
அறை கொண்ட
அவன் முகம்..
நீல இரவு
பிரதிபலிக்கும்
தார் சாலையின் ஊடே
அசுர வேகத்தில்
பயணித்து கொண்டிருக்கும்
சொகுசு பேருந்தின்
சில இருக்கைகளில்
இன்றும் பயணிக்கிறாள்
இதே போல்
ஒரு மங்கை..
மானம் காத்து கொள்ள
வீரத்தை நெஞ்சில்
ஊற்றியபடி..