சஹாரா

வார்த்தைகளை காசுகளாக
மாற்றுகிற சாமர்த்தியமறிந்த
புராணீகண் பொன் முட்டையிடும்
வாத்தினைத் தருவிக்கிறான்
அவனின் கருவூலங்கள் எங்கும்
அவைகள் தங்கமுட்டையிடுகின்றன !
காசினை விதைத்து
பணங்களை அறுவடைசெய்யும்
பக்குவமறிந்தவன் சொல்வதெல்லாம்
செல்வமாகிறது -
சொல்கிறதை செல்வமாக்குகிற
தந்திரம் தெரிந்தவன்
தலைவனாகும் சூத்திரம்
உணர்ந்தவனாகிறான் !
வணிகர்களின் வனங்கள் எங்கும்
புள்ளினமும் , பூவினமும்
விலங்கினமும் பொருள் குறித்தே
கதைத்துக் கிடப்பதறிந்து
வியாபாரக் கண்ணுற்றவன்
கனவானாகிறான் !
நன்றாய் வாணிபம் செய்யத்தெரிந்தவனின்
கூழாங்கற்கள் வைரமாக
கோடிகள் எளிதாக அவனுக்கு
சாத்தியமாகிறது !
வானத்தைச் சுருட்டி
நீலக்கம்பளம் தயாரிக்கும்
சூட்சுமத்தில் கைதேர்ந்தவனின்
வயல்களெங்கும் தங்கமணிகள்
வெயிலில் தக தகக்கின்றன
அவனது தட்டுகள் எங்கும்
பொன்னும் , மணியும்
நிறைந்திருக்கிறது !
பொருட்பசி கொண்டு
சேமித்தவனின் சேமிப்புக் கிடங்குகள் எங்கும்
டாலர்களும் , யூரோக்களும் , தினார்களும்
நிறைந்து கிடக்க
அவனது பத்தாவது தலைமுறை
வயிறு பசியெடுத்த தொரு நாளில்
நெல்மணி களைத்தேடி
தாகமெடுத்த ஓடுநாய் என
நீள் நாக்குத் தொங்க ஓடும் !
அந்நாட்களில்
அவன் பசுமைநிறை வயற்காடுகள் எங்கும்
பணப் பார்த்தீனியப் புதர் மண்டிக்கிடக்க
அதனுள் கையில் பணங்களுடனும்
வயிற்றில் பசியுடனும்
அவன் சந்ததி
ஒருவாய் நெல் மணிக்காக
ஒருவரை ஒருவர்
அடித்துக் கொண்டு அழியும்
அக்காலம் முழுவதும்
"உழுதுண்டு வாழ்வாரை
தொழுதுண்டு பின்செல்ல "
கொடுங்கோலர்களின் கூட்டத்தில்
அனைவரின் உயிர் பிரியும்
விழிகளும் அலையும்
ஆனால் -
தொலைதூரம் வரையிலும்
அவர்களது பார்வையில்
கானல் நீரில்
ஒட்டகங்கள் யாத்திரை போகும்
சஹாராக்கள் மட்டுமே மிஞ்சும் .