அறிவின் அடிக்குறிப்பு
உள்ளே புகுந்தென்னை
அரற்றித்திரியும் அறிவை
மற்றவர்களுக்கான சாட்டையாய்
மாற்றிப்பார்க்கிறேன்.
சிலநேரம் நானே வீழ்ந்தெழுகிறேன்
என் முன்னே நிற்காதீர்
தலைகொய்யவும் சாத்தியங்களுண்டு
மதர்ப்புற்ற மனத்திற்கெதிரே
உங்கள் வார்த்தைகளை
வைத்துக்கொள்ளாதீர்கள்
தீய்ந்துவிடவும் வாய்ப்புண்டு
நான் யாரென நிறுவுவதுதான்
கிடைத்த வாய்பென நிற்கிறேன்
தோல்வியால் என்னை நீங்கள்
பலமுறையடித்தாலும்
எழுந்து நிற்கும் ஆணவப்படியே
முற்றிலும் ஒழிக்கத்துணிகிறேன்
உங்கள் செவிப்பறை கிழிய
நானே சமூகத்தின் சாத்தான் என
ஓங்கிக்கத்துகிறேன்...
எதிர்வினைகளை கொத்தாய் கொய்கிறேன்
மௌணம் கொள்ளும்மட்டும்
தாக்குகிறேன்.
நீங்கள் மென்மையென சொன்னால்
முதுகின் மீதேறி வார்த்தைகளால்
மட்டுமில்லாமல் கிழிக்கிறேன்
எல்லாவற்றையுமே தொடர்ந்து
செய்கிறேன்
மனிதன் என்ற காரணப்பெயரோடு.