இந்த கவிதை இல்லையென்றால்

இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான் ?
இருபத்தியொன்றாம் வயதில்
எனக்கான முதல் மரணம்
நிகழ்ந்திருக்கும்...!
இருபத்தியெட்டாவது வயதில்
எனக்கான இரண்டாம் மரணம்
நிகழ்ந்திருக்கும்..!
முப்பத்துமூன்றாவது வயதில்
மூன்றாவது மரணத்தில்
ஜென்ம விமோசனம்
இன்றி அற்ப ஆவியாகிருப்பேன்.
மூன்று முறையும்
கவிதை படித்து
மனதை மாற்றி
தைரியத்தை கொண்டு
உயிரை காப்பாற்றிக்கொண்டேன்
ரசிகனை யாரும்
ரசிப்பதில்லையே...! -ஆனால்
நான் ரசிகன்
எனக்கு நானே ரசித்தேன்.
எனக்குள்ளிருக்கும்
மாபெரும் இரு
மனநல மருத்துவர்களை
மனமுருகி ரசித்தேன்.
ஒருவர் கருப்பு நிறத்தவர்
மற்றொருவர் கருப்பு அணிந்தவர்
பதின்ம வயதில்
வைரமுத்துவை காதலித்தேன்.
அவன் அழகைவிட
நாவின் தாளத்தில்
தமிழ் நடனமாடியதை
மனதில் படம்பிடித்தேன்...!
வெறும் ரசிகன்
வெறி ஏறிய ரசிகனாக
கல்லூரி காலத்தில்
கருப்பு கவிஞனின் மீது
மோகம் ஏறிக்கொண்டேன்..!
அப்படியே....!
அவன் மூளைக்குள்
குடியேறி தமிழை
குடித்துவிட துடித்தேன்.
வெள்ளை ஜிப்பாவுக்குள்
நூலாக நுழைந்து -அவன்
நூல்களை நுகர தவித்தேன்.
இவன் என்
ஆசான் ஆனான்
ஆனால் இவனுக்கு
ஆசானாக இருப்பது
யாரு?
புலன் விசாரணையில்
புலப்பட்டது..
கருப்பு கண்ணாடி
வழி பார்வையாலே
மொத்த தமிழையும்
தலைக்கு ஏற்றி
தலைமுடியை இழந்த
முத்தமிழ் அறிஞர்
கலைஞர் தான்
என் ஆசானின்
ஆசான் அறிந்தேன்.
இரு பொண்டாட்டிகாரனின்
திருட்டு புத்தி வந்தது
எனக்கு.........!
நல்ல காதல்
கலைஞர் மீதும்.
கள்ள காதல்
கவிப்பேரரசு மீதும்.
காலப்போக்கில்
அரசியல் சதுரங்கத்தில்
நெஞ்சுக்கு நீதி
வழங்கிய கலைஞரை
நெருஞ்சிமுள் குத்திய
வலியோடு காதலிக்கிறேன்
இன்னும் கூட
இப்போதும் கூட
இருவரையும்
ஒரு தலை காதலாய்...!
இந்த கவிதை
என்று ஒன்று
இல்லாவிட்டால்
என்னவாகியிருப்பேன்
நான்............?
இந்த
முப்பத்தைந்தாவது வயதில்
எனக்கான நான்காவது மரணம்
நிகழந்துகொண்டிருக்கும்.
---------------------------------------------------------------------------- --இரா.சந்தோஷ் குமார்.