என்னவனே அடே என்னவனே

ஒற்றையாய்த் தெரினும்
பிய்த்தொடிக்கத் தவிர்த்து
உதிர்ந்தவைகள் அள்ளி
பூக்களுக்கும் வலிக்காமல்
காதல் மொழிந்து கவர்ந்தவனே...!!!

காந்தர்வியுமாய் நானும்
மொழிகிறேன்..
விழிமூடிச் செவிதிற....!!

மருத்துவக் குறிப்புகளாய்
தினமொரு தினசரிச் செய்தி
பகிர்...!!

மாலை மணல் சந்திப்புகளில்
அதீதமாய்
சுண்டல் விழுங்கி
சத்தமாய் ஏப்பமிடாதே...!!

காதல் ஏக்கமெனச்
சொல்லி.... என் துப்பட்டா
முனைபிடித்து...உன்
விரல் சுழற்றாதே...!!
ஆண்மைக்குப் பிழறல்...!!

எப்பொழுதும் இயல்பாய்
நடக்கும் எதற்கோ..
என்னைக்கோர்த்து பெரியதாய்
வர்ணிக்காதே...!!
இயந்திரங்களில் ஒருபோதும்
ரத்தம் ஒழுகுவதில்லை...!

நடுவிரல் அழுந்தப்பற்றி
விழிஉற்று நோக்கு...! இன்னும்
ஆழமாய் காதல்
உணர்த்துகிறது அத்தருணங்கள்..!!

தூங்கும் முன்
தினமும் ஒரு
நான்குவரிக் கவிதை படி...!!

கலவிப் பொழுதுகளில்
நெற்றிபடர் கூந்தல் வருடிப்
பிரித்து..
எனைத் தவிர்த்து... என்
காதுகளோடு மட்டும்
பேசிக்கொண்டிரு....!
தாகமெடுத்தால் பின்கழுத்தில்
வியர்வை குடி..!!

கழிந்த களைப்பில்
தலையணை தவிர்த்தெறிந்து
என் வயிறு தழுவித் தூங்கு...!!!

எப்போதாவதென.... என்
பணிச்சுமை நாட்களில்
எளிமையாய் ஒரு
சிற்றுண்டியோடு
வரும்வரை காத்திரு...மெழுகுத் திரி
வெளிச்சங்களில்...!!

விலக்குநாள் அயர்ச்சித்
தளர்வுகளினூடே..
தொலைகாட்சி நேரலை
உச்சங்கள் கண்டதிர்ந்து
கூச்சலிடாதே....!!

மகள் திருமண
வழியனுப்பலில் கண்ணோரம்
கசக்குமென்னை... அவளின்
ஒருவயது உடைகாட்டிப்
பின்னிழுத்துப் போ....!!

இப்படியே
சொட்ட சொட்டக் காதலி..
ஒருகையில் ஊன்றுகோலும்
மறுகையில் என்
உள்ளங்கைப் பற்றலுமாய்..
காதல் மொழிந்த
நாள் தினத்தில்
மாலை நேரப் பூங்காக்களின்
சூரியமறைவு
ரசித்துக் கொண்டே.....!!!

எழுதியவர் : சரவணா (20-Mar-14, 1:54 pm)
பார்வை : 164

மேலே