நேசம் வந்தால் நேசிப்போம்

நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.

உனக்குத் தாமரைப்பூ பிடிக்கும் என்பதற்காக
என்னைத் தாமரையாக மாற்றி விடாதே;
எனக்கு மல்லிகை பிடிக்கும் என்பதற்காக
நீயும் மல்லிகையாக மாறி விடாதே;

நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.

கழுகின் சிறகை வெட்டி
கூண்டில் அடைத்து
‘ஆகா, என் கழுகு
என்னிடமே இருக்கிறது’ என்று
நினைத்துக் கொள்வதில் என்ன பெருமை?

அது
சூரியனை மறைக்கும் சிறகுகளையும்
வேடர்களை அடித்துத் துரத்தும் வலிமையையும்
அடைந்த பிறகும்
உன்னைத் தேடி வந்து
உன் தோளில் அமருமானால்
அதுவல்லவோ பெருமை?

நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.

பிடி இறுகாத போதும்
விலகாத நேசம்,
சாட்சியங்கள் கிடைத்த போதும்
அசையாத நம்பிக்கை,
கால தூரத்தால் பாதிக்கப்படாத புரிந்து கொள்ளுதல்-
இவை போதும்.
இதில்
கட்டாயமில்லை; தடையில்லை;
நிபந்தனையில்லை, தேவையில்லை.
நான்கு பேர் பார்க்கப் போடும்
நாடகமில்லை.

நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (20-Mar-14, 2:20 pm)
பார்வை : 264

மேலே