கட்டுரை அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்- சிறு குறிப்பு02
வாய்பாடு (01):-------- விளம் –மா- தேமா-
---------------------------------விளம் – மா- தேமா
விளம் என்பது-கூவிளம், கருவிளம் என்று எதுவாகவும் இருக்கலாம்;
மா-என்பது தேமா, புளிமா என்று எதுவாகவும் இருக்கலாம்.
எ-டு:
செல்வமும் தீர்ந்து போனால்,
++சீந்துவார் இன்றிப் போகும்!
கல்வியும் மறந்து போனால்,
++காமுறும் குழுவும் போகும்;
வல்வினை குன்றிப் போனால்,
++வாழ்விதும் முடிந்து போகும்!
செல்வனை!, இயேசு தன்னைச்
++சேர்ந்தவர்க்(கு) எதுவும் போகா!......(எசேக்கியல்காளியப்பன்)
இந்த அறு சீர் விருத்தப் பாவானது, முதல் அடியில்,
செல்/வமும்/ தீர்ந்/து/ போ/னால்/ ------அதாவது
கூ/விளம்/ தே/மா/ தே/மா/ ------------------என்றும்,
சீந்/துவார்/ இன்/றிப்/ போ/கும்/ ---------அதாவது
கூ/விளம்/ /தே/மா/ தே/மா/ -----------------என்றும் அமைந்த ஆறு சீர்களைக் கொண்டுள்ளது.
இது போலவே மற்றைய அடிகளுக்கும் அலகிட்டுத் தெரிந்து கொள்க.
*** ***
எ-டு-2
மச்சுத்தான் நாடு! மற்றிப்,
=புத்தகம் மக்கள்! அன்னார்
குச்சுத்தான் பெட்டி; கொண்ட
=சொற்களே பேச்சு; வேறென்
இச்சைதான் சட்டம்; எந்தன்
=எழுத்துதான் திட்டம்; திட்டத்
தச்சனும் நானே! ஆட்சித்
=தலைவனும் நானே காண்பாய்!.....(எசேக்கியல் காளியப்பன்)
இந்த அறுசீர் விருத்தப் பாவில்,
முதலிரண்டு அடிகளின் முதற் சீர்கள்
-மச்சுத்தான், குச்சுத்தான்- தேமாங்காய் என்ற வாய்பாட்டில் அமைந்தும்,
அடுத்த இரண்டு அடிகளின் முதற் சீர்கள்- இச்சைதான், தச்சனும்- என்று
கூவிளம் என்ற வாய்பாட்டிலும் அமைந்துள்ளதை நோக்கவும்;
அதோடல்லாமல்,
முதலிரண்டடிகளின் நான்காவது சீர்கள் கூவிளம் என்ற வாய்பாட்டில் அமைந்து முதற் சீர்களின் வாய்பாடான தேமாங்காயிலிருந்தும் மாறுபட்டுள்ளதையும் நோக்குக.
குறிப்பிடப்பட்டுள்ள காய்ச்சீர்களும் கூவிளம் என்ற வாய்பாட்டுச் சீர்களாகவே அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்;
வரக்கூடாது என்பதற்கில்லை, விளச்சீர்க்குக் காய்ச் சீர் வரலாம் என்று தெரியப்படுத்தவே இப்பாடல் கொடுக்கப்பட்டுள்ளது.
*** ***
வாய்பாடு (02)----- மா மா காய்
------------------------------------மா மா காய்.
எ-டு:
உம்மில் நானும் நிலைத்திருக்க,
==உதவக் கேட்டேன் வாருமையா!
எம்மில் நீரும் நிலைத்திருந்தே,
==எண்ணில் கனிகள் தாருமையா!
உம்மில் அன்பாய் உமதுபிதா,
==உள்ள தறிவோம்; அதுபோல
எம்மில் அன்பாய் இருந்திடவே
==ஏங்கி அழைப்போம் வந்திடுமே!.......(எசேக்கியல்காளியப்பன்)
இந்த அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
உம்/மில்/ நா/னும்/ நிலைத்/திருக்/க/ ---------என்பது
தே/மா/ தே/மா/ கரு/விளங்/காய்/ ------------என்றும்
உத/வக்/ கேட்/டேன்/ வா/ருமை/யா/ ---------என்பது
புளி/மா/ தே/மா/ கூ/விளங்/காய்/ ---------------என்றும் அமைந்துள்ளது கவனித்து, மற்றைய அடிகளுக்கும் இதுபோல் அலகிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
===== ++++ இன்னும் வரும் ++++ =========