இந்தியனின் இறுதிப் பிறவி - மணியன்

விதியென்று எதையெல்லாம்
விட்டுத் தள்ளுவது. . .
விழித்தது முதல்
வீழ்வது வரை
விடுகதையே வாழ்க்கையெனில் . . . . .
**********

கூவுகின்றச் சேவல் கூடக்
கடனேயென்று கூவுகிறது. . .
காலம் வரும் நமக்கென்று மனம்
கற்பனையில் மிதக்கின்றது . . . . . .
**********

ஓடிவரும் துன்பம் மட்டும்
ஒருவழிப் பாதையென
ஒழிந்து போகாமல்
ஒய்யாரமாய்ச் சிரிக்கின்றது . . . . .
**********

நாள்காட்டியில் கிழிபடும்
நேற்றைய பொழுது மட்டும்
நெஞ்சில் பாரமான
நாளில் ஒன்றைக் கழிக்கின்றது . . . . .
**********


தேடுவது தெரியாமலே
திசையெங்கும் நோக்குகிறேன். . .
தேவைகள் மட்டுமிங்கு
தினந்தோறும் வளர்பிறையாய். . . .
**********

ஏழைகளின் காவலர்கள்
எங்கேயெமை வாழவிட்டார். . .
எமனைவிட தரத்தில் கெட்டார்
எமது நெஞ்சில் தீயால் சுட்டார். . . . . .
**********

சுடும்காடும் சுற்றி வளைத்தார் .
சுயமதை களைந்து கெட்டார். .
சுதந்திரச் சொல்லை மட்டும்
சீதனமாய் எமக்கு விட்டார். . . . .
**********

எதைக் காட்டி
என் மகவின்
எதிர்காலக் கனவுக்கினி
எண்ணமதில் வண்ணம் சேர்ப்பேன். . . .
**********

கூடுவிட்டுக் கூடுபாயும்
குறளி வித்தை அறிந்திருந்தால்
கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து
கானல் வழி பறந்திருப்பேன். . . . .
**********

இதுதான் இறுதி வரை
இப்பிறவியின் நிலையும் எனில்
இந்தியனாய்ப் பிறப்பதென்றால்
இனி ஒரு பிறவி எதற்கு ? ? ? . . . .


*-*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (25-Mar-14, 7:56 pm)
பார்வை : 90

மேலே