காகிதப் பூக்கள்
சிரித்திடும் மலரினை
விழிகளில் பதித்து..!
தவழ்ந்திடும் மேகத்தை
கூந்தலில் பொதித்து..!
தேன்கனி மொழியினை
இதழ்களில் வடித்து..!
இனித்திடும் கனவுகள்
மனதினில் பொருத்தி..!
மணப்பெண்ணாகும்
கனவினில் வாழ்ந்தாள்
கவிதையாய் ஒருத்தி!
பந்தல் அமைத்து
பட்டாடை உடுத்தி
தோரணங்கள் தொங்க
மேளச்சத்தம் கேட்க
மனமார வாழ்த்தும் உறவுகள் கூடி
மணமாலை சூடி
புன்னகையும் பொன்னகையும் அணிந்து
புகுந்தவீடு செல்வோம் என்று
எண்ணி எண்ணி அவள்
ஆனாள் முதிர்கன்னி !
வரிசையாய் வரன்கள்
வந்தவண்ணம் இருக்க
இம்முறை மணமாகும் என்றஎண்ணம்
அவள் மனதினில் இனிக்க
வந்தவர்களெல்லாம்
இரயில் சிநேகிதர்களாக ..!
வாழ்க்கை பாடத்தில்
பெயிலானாள் அவள்!
காரணம்,
வறுமையின் உச்சத்தில்
வாடிய தந்தை,
வரதட்சணை இல்லாத்திருமணம்
உலகத்தின் விந்தையல்லவா?
கார்மேகமாய் அவள்
முகம் கருக்க
அடைமழையாய் அவள்
விழி நனைந்தாள்..!
சிந்திடும் மழைத்துளி
மண்ணோடு மறைவதுபோல்
நொந்திடும் அவள் மனம்
அவளோடு கரைத்தாள்!
வாழ்க்கை அவளுக்கு
கரையைத் தேடும் ஓடமானது!
கரைசேர பெண்களுக்கு
அவள் ஒரு பாடமானாள்!!