அரிதாரம் பூசும் அரசியல்வாதிகள்
அரிதாரம் பூசும் அரசியல்வாதிகள் !
மொழித்தலைவன்
இனத்தலைவன்
பரம்பரை பெருந்தலைவன்
ஏழைக் கண்ணீரின் காவல் மகன்
புதிதாய் ஒரு கலகன் !
வீதிக்கொரு ஜாதி நட்டு
ஜாதிக்கொரு கட்சி வளர்த்து
கறை படிந்த கரம் மறைக்க
திளைக்கின்ற இரத்தம் வார்த்து
கண்ணீரால் காத்த எம் தேசம்
எங்கும் செந்நீரால்
நிறைத்துச் செல்வார் !
வளர் பாரதத்தின் மனதில்
ஆலகால விஷம் நிறைத்து
வருங்கால தூண்களில் மெல்ல
துரும்பாகும் இரும்பு நிறைத்து
இவர் அரங்கேற்றும் நாடகங்கள்
கோடி கோடியாய் முகம்
உடையவளின் நாடி பிடித்து
உலுக்கும் அவலங்கள் !
அரிதாரம் பூசும் அரசியல்வாதிகள் !
நாடகம் முடிவில்
திரைச் சீலை மறைவில்
அரிதாரம் கலைத்து நிற்பார்
இவர் எல்லோரும்
ஓர் முகமாய் !