மரணத்தூண்டில்
மரணத்தூண்டில் - படைப்பு கவிஞர் அருள்மதி . சி
---------------------------------------------------------------------------
என் உயிர் கடிகாரத்தில்
எஞ்சியுள்ள நிமிடங்கள் எத்தனை ?
மரணத்தை ஏற்க மறுக்கும் மனம்
மரண விலக்கு உண்டா ?
நிறைவேறா ஆசைகளும் கனவுகளும்
எக்காளமிடுகின்றன என்னைப்பார்த்து !
நான் செய்த பாவங்கள்
நங்கூரமிடுகின்றன என் ஆழ்மனதில் !
வாழ்வின் விளிம்பில்
என் உயிர் ஊசலாடுகிறது !
மரண விளிம்பில்
உயிர் அமிர்தம் குடிக்க
என் மனநாக்கு ஏங்குகிறது !
'உயிர்வியாபாரியிடம்' பிச்சை கேட்டேன் !
பாலாபிசேகம், பணம், மொட்டை
பூச்சட்டி, அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் ........
என் வியாபார உத்திகளெல்லாம் வீணாய்ப்போயின.
பூவுலகில்
என் வாழ்க்கை ஒப்பந்தம்
காலாவதியாகிவிட்டதாம் !
எமனை ஏமாற்றிப் பூட்டிவைக்கும்
சாவியை சாவித்திரியிடம் கேளுங்கள் !
நசிகேதனிடம் நழுவ வழி கேளுங்கள் !
பீஷ்மரிடம் வினவுங்கள்
விரும்பிச் சாகும் மரணம் பற்றி !
என் சந்தேக மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன
அதில் எமன் சிரித்துக்கொண்டிருந்தான்.
கண்திரையின்
குவியமும் குழியமும்
ஏறிக்குறைந்து சுழிகின்றன.
காதுகளின் டெசிபல்கள்
வலுவிழக்கின்றன.
நாசிகளின் நுகர்விகள்
உயிர்காற்று உறிஞ்சும்
ஓட்டைகளாய் மட்டும் ஒடுங்குகின்றன.
நாக்கின் சுவை அரும்புகள்
ருசிக்க மறுக்கின்றன.
கொழுப்புத் தோல்போர்வை
கந்தலாய் சுருங்குகிறது.
வாய் குளறி
வார்த்தைகள் வெறும் ஓசையாகி
முனகலாய் முற்றுப்பெறுகின்றன.
அவயவங்கள்
அனிச்சை செயல் மட்டும் செய்கின்றன.
பெருமூளையும் சிறுமூளையும்
நினைவை நிறுத்தப் போராடுகின்றன.
தண்டுவடம் மரணஈர்ப்பு விசையால்
மண்நோக்கி வளைகிறது !
மரண 'நோய்க்குறி'
அங்குலம் அங்குலமாய்
மனக்கூட்டில் வியாபிக்கிறது.
நிர்வாணமாய் நிறைபனியில் நிற்பதுபோல்
என் உதரவிதானம் துடிக்கிறது.
எலும்பும் தோலும்
ஒற்றைக் காகிதமாய் கனக்கிறது.
இரத்தம் பாய மறுத்து
சுண்டி உறைந்து
உடல் சில்லிட்டு நிற்கிறது.
உயிர்
எனது ஒன்பது ஓட்டை வழியே
ஒழுகிக்கொண்டிருக்கிறது.
'துயர வலிகள்'
என்னைச் சாவுக்குத் தூண்டின.
எமன் மரணத்தூண்டில் வீசிவிட்டான்
நரகமும் சொர்கமும் இரையாய் வைத்து
எதனைக் கவ்வி இந்த உயிர்மீன் இறக்குமோ ?!