இணைச்சுவர் வைத்தார் இனிது - நேரிசை வெண்பாக்கள் 16
கவிதையானது மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரு வகைப்படும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று அனைத்துச் செய்யுள் உறுப்புகளும் சரியாக அமைந்து இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு பிறப்பது மரபுக்கவிதை ஆகும்.
பொருளை மட்டும் அடிப்படையாய்க் கொண்டு இயல்பாய் அமைவது புதுக்கவிதை ஆகும். பொருள் இருவகைக் கவிதைக்கும் அடிப்படை.
எனவே சில புதுக்கவிதைகளின் சில பகுதியை எடுத்துக் கொண்டு மரபுக்கவிதை அமைத்தால் எப்படி யிருக்கும் என்ற எண்ணத்தைச் செயலாக்க முனைந்தேன்.
கவிஞர் சி.அருள்மதி 'மனத்துரு' என்ற கவிதையில் கூறியிருப்பதை வெண்பா வடிவில் கீழே தரப்பட்டுள்ளது:
பலன்தரும் நீர்க்குளத்தை பாங்காய் நிரப்பி
விலைபேசி விற்று ஃபிளாட்கள் – கலையென்று
கட்டிய பின்மொட்டை மாடியில் கட்டினர்
திட்டியாய் நீச்சல் குளம்! 1
திட்டி - திருஷ்டி
நாற்பது ஆண்டுகளாய் நன்றாய் வளர்ந்தமரம்
ஏற்கெனவே வெட்டிப் பலிகொடுத்து – மேற்புறம்
மேல்மாடி வீடுகட்டி மேன்மையான முற்றத்து
பால்கனித் தோட்டத்தில் புல்! 2
செல்லமாய் நம்மை வளர்த்துவந்த சீர்மிகு
நல்லோரை பெற்றோரை நன்றியின்றி - பொல்லாங்கு
சொல்லி முதியோர் வசிக்கும் முதுகுடிலில்
தள்ளுவதேன் நீயே இயம்பு! 3
வாய்ப்புகையும் வாகனப்பு கையுமே வேகமாக
வாய்வுமண்ட லத்தை விடமாக்கி - வாய்த்தநம்
கட்டில றையிலொரு காற்றுப் பதனாக்கி
வெட்டியாகக் கொண்டோம் விரைந்து! 4
சின்னத் திரைக்க திகநேரம் சீரழித்து
மென்னி மெழுகாய் உருகிட – என்றும்
சிரிக்க மறந்துமே சிந்தனை இல்லா
கரித்திடும் வாழ்க்கை கசப்பு! 5
நினைத்தவாறு வாஸ்துசெய்து, நீராய் இறைத்து
மனையினில் வீடுகட்டும் மாறன் - முனைந்து
நினைத்தே இறையறையும் நீரடியும் சேரா
இணைச்சுவர் வைத்தார் இனிது! 6
நாற்பது ஆண்டுகளாய் நன்றாய் வளர்ந்தமரம்
ஏற்கெனவே வெட்டிப் பலிகொடுத்து – மேற்புறம்
மேல்மாடி வீடுகட்டி மேன்மையான முற்றத்து
பால்கனித் தோட்டத்தில் புல்லும் வளர்த்து
மரத்தினை வெட்டிய பாவத்திற் காக
பரிகாரம் செய்தேன் பரிந்து! 2 A - பலவிகற்ப பஃறொடை வெண்பா
காற்றுப் பதனாக்கி - A.C
இறையறை – கடவுள் அறை,
நீரடி – கழிப்பறை, குளியலறை