எங்கே எனது வீடு
எங்கிருந்தோ உருண்டோடி வந்த
பாறை
உள்ளங்கை மீறி ஓடும்
நதியின் நடுவில்
வீழ்ந்து தாழ்வதாய்
கீழிறங்குகிறது
தனிமையின் அடர்த்தி
குருட்டு மொழியில் உயிர் சுமக்கும்
கவிதைகளின் சொற்கள்
தூரம் சென்று திரும்பி வர மறுப்பதாய்
நினைவுகள் நீண்ட சுவர்களுக்கு
பூச்சிட மறுக்கின்றன
வண்ணங்கள் வெளுத்த வானவில்கள்.
அந்தியொழுகும் வானத்தின் மீது
விரக்திகள் கல்லெறிய
துரிதமாய் சுருங்கியது சூரிய பலூன்.
தினமும் எரிவதாய்
காத்திருப்பை பிரவகிக்கும்
வனாந்தரக் குரல்
காயமுற்ற ஒரு நிழலாய்
சாளரம் நோக்கி எழுந்து வருகிறது
எங்கே எனது வீடு.
கல்கி சித்திரை சிறப்பிதழில் இன்று (05.04.2014)வெளிவந்த எனது கவிதை.
ஓவியம் -ஜெயந்தன் சீராளன்